இரட்டை இலை சின்னம் வழக்கு: டிடிவி தினகரனின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 01:55 pm
ttv-dinakaran-s-case-hearing-at-sc

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற டிடிவி தினகரனின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. மேலும், வழக்கை வருகிற 15ம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சியானது ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி எனவும், அதிமுக அம்மா அணி என்று டிடிவி.தினகரனும் இரண்டாக செயல்பட்டு வந்தனர். இதையடுத்து எதிரெதிர் அணியாக செயல்பட்டு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஓரணியாக இணைந்ததை அடுத்து அவர்களின் அணிக்கு அதிமுக கட்சி ,இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் மேற்கண்ட உத்தரவிற்கு எதிராக டிடிவி.தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் ஜிஎஸ்.சிஸ்தானி மற்றும் சங்கீதா டிங்கிரி சேகல் ஆகியோர் அமர்வில் கடந்த ஓராண்டாக விசாரணை நடந்து வந்தது. 

இதனிடையே கடந்த மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலையை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இரட்டை இலை சின்னம் கிடைக்காததை அடுத்து குக்கர் சின்னத்தை தங்கள் அணிக்கு ஒதுக்க ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு தினகரன் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தரப்பு வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்நிலையில், இரட்டை இலை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தினகரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம், வரும் 14ம் தேதி வரை குக்கர் சின்னத்தை வேறு யாருக்கும் ஒதுக்காமல் இருக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. எனவே மார்ச் 14ம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தை நாடி குக்கர் சின்னத்தை தங்கள் அணிக்கு ஒதுக்க வேண்டும் என்று தினகரன் சார்பில் தனி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. 

தொடர்ந்து, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் பணிகளை மேற்கொள்ள சின்னம் தேவைப்படுகிறது என்றும் எனவே இரட்டை இலை மேல்முறையீட்டு மனுவையும் குக்கர் சின்னத்தை ஒதுக்கக் கோரிய மனுவையும் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு டிடிவி தினகரன் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் கோரிக்கை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், 14ம் தேதி வரை குக்கர் சின்னத்தை யாருக்கும் ஒதுக்கப்பட மாட்டாது என்றும் எனவே வழக்கை 15ம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் வேண்டும் தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close