நிர்பயாவிற்கு அளித்த முக்கியத்துவம் பொள்ளாச்சி பெண்களுக்கு கொடுக்கப்படவில்லை: நீதிபதிகள் வேதனை!

  முத்துமாரி   | Last Modified : 12 Mar, 2019 04:57 pm
madurai-court-judges-statement-about-pollachi-assault-case

நிர்பயாவிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கொடுக்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த சம்பாசிவம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார், அதில் "கடந்த நவம்பர் 6ம் தேதி கஜா புயல் தாக்கியதில் பட்டுக்கோட்டையில் இருந்த எனக்கு சொந்தமான தென்னை மரங்கள் முழுவதுமாக அழிந்துவிட்டன. அப்பகுதியில் உள்ள 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குவதற்கு வசதி ஏற்படுத்தித்தர மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

பட்டுக்கோட்டை பகுதி தென்னை விவசாயம் அதிகம் உள்ள பகுதியாகும். தென்னை முற்றிலுமாக அழிந்துவிட்ட நிலையில், உரிய நிவாரணம் அளிக்க வேண்டுமெனவும், தென்னை, பலா மற்றும் மா மரங்களும் கஜா புயலில் முற்றிலுமாக அழிந்துவிட்டன. ஆகையால், தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன்,எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, மத்திய அரசு கஜா புயல் பாதிப்பிற்கு வழங்கிய நிவாரணத்தில், மாநிலத்திற்கு, மாநிலம் வேறுபாடுகள் உள்ளன.  நகர்புற பாதிப்புகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும், அழுத்தமும் ஊரக பகுதிகளுக்கு கொடுக்கப்படவில்லை என்றனர்.

தொடர்ந்து நீதிபதிகள், தேசிய ஊடகங்கள் ஊரகப் பகுதிகளை புறக்கணிப்பதாக வருத்தம் தெரிவித்ததோடு, டெல்லி நிர்பயாவிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படவில்லை என வேதனை தெரிவித்தனர்.

தொடர்ந்து, கஜா புயலால் கேராளாவில் எத்தனை மாவட்டங்கள்? எவ்வளவு பாதிக்கப்பட்டன? அவற்றிற்கு எவ்வளவு நிவாரணம் வழங்கப்பட்டது? தமிழகத்தில் எத்தனை மாவட்டங்கள்? எவ்வளவு பாதிப்படைந்தன? எவ்வளவு நிவாரணம் வழங்கப்பட்டது? என அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close