மணல் கொள்ளைக்கு உதவிய அதிகாரிகள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர்: நீதிமன்றம் கேள்வி

  Newstm Desk   | Last Modified : 23 Mar, 2019 04:14 pm
what-action-was-taken-against-officers-who-helped-the-illegal-sand-loot

சட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்த எத்தனை அதிகாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்? என்பது குறித்து பதிலளிக்கும் படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

சென்னையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ,"திண்டுக்கல் மாவட்டத்தில் சவடு மணல் குவாரிக்கு அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, நீர் நிலைகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்" என மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மண் குவாரிகளை ஆய்வு செய்த அறிக்கையை வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சித்தரேவு கிராமத்தில் அரசு நிலம் மற்றும் தனியார் பட்டா நிலங்களில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளது. இங்கு 10 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு மண் எடுக்கப்படடுள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இயற்கை வளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கு அரசு  துணைபோயுள்ளது. ஏற்கனவே ஒரு வழக்கில் மணல் கொள்ளைக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உள்துறை செயலருக்கு உயர் நீதிமன்றம் 8.5.2018-ல் உத்தரவிட்டது. அதன்படி எத்தனை அதிகாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவில்லை.

பழனி சித்தரேவு கிராமத்தில் உரிமம் பெறப்படாத இடத்தில் தனி நபர் சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்த அனுமதித்த அதிகாரிகள் ரூ.75 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும்.

மேலும் தமிழகத்தில் மாவட்டம் வாரியாக மணல், சவடு மண், ப்ளூமெட்டல் மற்றும் குவாரிகளுக்கு தடை விதிக்கப்பட்ட இடங்கள் எத்தனை?  தடை செய்யப்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக குவாரி நடைபெற்று வரும் பகுதிகள் எத்தனை? சட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்தது தொடர்பாக எத்தனை அதிகாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்? அவர்கள் என்னென்ன பொறுப்புகளில் உள்ளனர்?

மணல் கொள்ளை தொடர்பாக என்னென்ன பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது? சட்டவிரோத மணல் கொள்ளையர்களிடம் இருந்து கடந்த பத்து ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை எவ்வளவு (ஆண்டு வாரியாக) என்பது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close