கடை நிலை பணிகளுக்கும் எழுத்து தேர்வு : நீதிமன்றம் அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2019 06:10 pm
store-level-tasks-written-exam

துப்புரவு பணியாளர், தோட்ட பணியாளர், கிராம உதவியாளர், மதிய உணவு ஒருங்கிணைப்பாளர், உதவி சமையற்காரர், அலுவலக உதவியாளர் போன்ற கடை நிலை பணிகளுக்கும் எழுத்து தேர்வு அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்யும் வழிகாட்டுதல்களை பிறப்பிக்க தமிழக அரசின் தலைமை செயலருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.

தேனியை சேர்ந்த உதயகுமார், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஓர் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " கடந்த 2011 பிப்ரவரி 9-ஆம் தேதி சேகர் என்பவர் காமையக்கவுண்டன்பட்டி பஞ்சாயத்து யூனியனில் இரவு காவலராக நியமிக்கப்பட்டார்.  

மாற்றுத்திறனாளியான நான்  8-ஆம் வகுப்பு முடித்த நிலையில் 1998-லேயே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். ஆனால் எனக்கு பின்னர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த சேகர் என்பவர் காமையக்கவுண்டன்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் இரவு காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த பஞ்சாயத்து யூனியனின் செயலாளரின் நெருங்கிய உறவினர் எனும் அடிப்படையில்  அவருக்கு இரவு காவலர் பணி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, இரவு காவலராக சேகரை நியமித்ததை ரத்து செய்து என்னை அந்த பணிக்கு நியமிக்க  உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், " சேகர் என்பவரின் பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் கோரியுள்ளார். பணி நியமனம் பெற்று 8 ஆண்டுகளுக்கு பின்பு அவர் இந்த கோரிக்கையை நீதிமன்றத்தில் வைத்துள்ளார். 8 ஆண்டுகள் சேகர் பணியை தொடர்ந்துள்ளார். எனவே அதை ரத்து செய்ய முடியாது.

இருந்தபோதும் இதுபோன்ற பணி நியமனங்களில் எவ்விதமான விதிகளும் பின்பற்றப்படுவதில்லை என்பது தெரியவருகிறது. உரிய விதிமுறைகள் இல்லாததால் பதவியில் இருப்பவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை  பணிகளில் நியமிக்க வாய்ப்புள்ளது. பொது நிர்வாகம் சிறந்த முறையில் செயல்பட, அடிப்படை பணிகள் முக்கியமானவை என்பது சந்தேகம் இன்றி உறுதியாகிறது. எனவே இந்த பணிகள் அனைத்திலும் விதிகளுக்கு உட்பட்டு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். 

குறிப்பாக, இரவு காவலர், அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளர், தோட்ட தொழிலாளர்கள் போன்ற பணியிடங்களில் தங்களுக்கு வேண்டியவர்களையும், ஒரு சார்பாகவும் அதிகாரிகள் நியமிக்கின்றார்கள். இதுபோன்ற ஊழல் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும். அதனால் தகுதியான பணியாளர்களை தேர்வு செய்வது அவசியம். மதிய உணவு ஒருங்கிணைப்பாளர், இரவு காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் போன்ற பணியிடங்களுக்கு தமிழகத்தை பொருத்தவரை நேர்முகத்தேர்வு அடிப்படையில் தான் தேர்வு நடைபெறுகிறது. 

அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்களின் பரிந்துரை அடிப்படையில் பெரும்பாலான பணி நியமனங்கள் நடைபெறுகின்றன. அப்படி இருக்கும்போது ஒட்டு மொத்தமாகவே பொது நிர்வாகத்தின் அடிப்படை பணியாளர் தேர்வு நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறாது. இதுபோல நேர்மையற்ற முறையில்  நியமனம் பெறும் அந்த ஊழியர்களிடம் இருந்து நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்? மேலும் அவர்கள் சமூகத்தின் சுயமரியாதையை காப்பாற்றி சேவை புரிவார்கள் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?.

திறனற்ற நிர்வாகம் என்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு கரும்புள்ளியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே துப்புரவு பணியாளர், தோட்ட பணியாளர், கிராம உதவியாளர், மதிய உணவு ஒருங்கிணைப்பாளர், உதவி சமையலர், அலுவலக உதவியாளர் போன்ற கடை நிலை பணிகளுக்கும் எழுத்து தேர்வு அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்யும் வழிகாட்டுதல்களை தமிழக அரசின் தலைமை செயலாளர் பிறப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் வழிகளில் நேர்முகத்தேர்வுக்கான மதிப்பெண்கள் 15 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கக்கூடாது. இதுதொடர்பாக தலைமை செயலாளர் உரிய உத்தரவு பிறப்பித்து, அதுகுறித்த அறிக்கையை ஜூலை மாதம் 24 ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close