சென்னை முழுவதும் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில், நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கக்கோரி ஆடிட்டர் வந்தனா சக்காரியா என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆஜராகி நடைபாதை ஆக்கிரமிப்பு குறித்து விளக்கமளித்தார். சென்னையின் 15 மண்டலங்களிலும் 40 ஆயிரம் நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்ட இடங்கள், நேரம் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னை முழுவதும் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை உடனே அப்புறப்படுத்தி டிசம்பர்.18 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், நடைபாதைகளை வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்திய நீதிமன்றம் வழக்கை டிச.18ஆம் தேதிக்கு ஒத்துவைத்தது.
Newstm.in