வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுக்கு சவால் விடுத்துள்ள அன்புமணி ராமதாஸ்!

  சுஜாதா   | Last Modified : 29 Oct, 2018 07:09 am
hydrocarbon-project-cauvery-districts-are-affected-anbumani-ramdoss

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் காவிரிப் பாசன மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும். இதுகுறித்து சட்டசபையில் பேச வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுக்கு துணிச்சல் உண்டா?. என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.  

காவிரிப்பாசன மாவட்டங்களை பாதுகாக்க வலியுறுத்தி டாக்டர் அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு குறித்து பேசிய அவர், பின்னர்  நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இவற்றில் இரண்டுக்கான உரிமங்கள் வேதாந்தா குழுமத்துக்கும், ஒன்றுக்கான உரிமம் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தைக் கொண்டு நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் 731 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள 85 கிராமங்களில் மீத்தேன், ஈத்தேன், கச்சா எண்ணெய், பாறை எரிவாயு, இயற்கை எரிவாயு உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன்கள் எடுக்கப்படும்.

வேதாந்தா நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ள முதல் உரிமத்தின்படி, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் கடலூர் மாவட்டம் பிச்சாவரம் வரை 1,793 சதுர கி.மீ. கடல் பரப்பில், 123 இடங்களிலும், இரண்டாவது உரிமப்படி பிச்சாவரம் முதல் நாகை மாவட்டம் வேதாரண்யம் வரை 2,574 சதுர கி.மீ கடல்பரப்பில் 47 இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படவுள்ளது.

வேதாந்தா நிறுவனம் சார்பில் கடலில் மொத்தம் 170 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படுவதால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஒட்டுமொத்தமாக 200-க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவற்றில் பெரும்பாலானவற்றில் மீத்தேன் எரிவாயு எடுக்கப்படலாம். அவ்வாறு எடுக்கப்பட்டால் காவிரி டெல்டாவில் நினைத்துப்பார்க்க முடியாத பாதிப்புகள் ஏற்படும்.

மீத்தேன் திட்டங்களால் மக்களுக்கு இருவகையான பாதிப்புகள் ஏற்படும். முதல் பாதிப்பு மீத்தேன் எடுப்பதற்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தால் காவிரிப் பாசன மாவட்டங்கள் பாலைவனமாகும் ஆபத்து உள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்கு கீழே சென்று விடும். இதனால், காவிரிப் பாசன மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும். இதுகுறித்து சட்டசபையில் பேச, இந்த தொகுதியை சேர்ந்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுக்கு துணிச்சல் உண்டா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு லட்சம் தமிழர்களை கொன்று குவித்த அரக்கன் ராஜபக்சே. இலங்கை அதிபர் சிறிசேனாவும், ராஜபக்சேவும் இணைந்து நாடகம் நடத்துகிறார்கள். இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு இருப்பதாக சந்தேகம் வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close