மேலதிகாரிகளால் அவமானம்; திருநங்கை காவலரின் தற்கொலை முயற்சி

  Newstm Desk   | Last Modified : 05 Dec, 2018 01:22 pm

transgender-police-suicide-attempt

ராமநாதபுரம் மாவட்டம் ஆயுதப்படை காவலரான திருநங்கை ஒருவர், மேலதிகாரிகள் தொடர்ந்து அவமானப்படுத்தியதாகக் கூறி தற்கொலைக்கு முயன்று ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் வெளியிட்ட காணொளி வைரலாகி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நஸ்ரியா(22). திருநங்கையான இவர் மிகுந்த சிரமத்திற்கிடையேயும், புறக்கணிப்பையும் மீறி தமிழகக் காவல்துறையில் கடந்த ஆண்டு இணைந்தார். அவருக்கு ராமநாதபுரம் ஆயுதப்படையில் இரண்டாம் நிலைக்காவலராக பணி கிடைத்தது. இவர் ராமநாதபுரத்தின் முதல் திருநங்கை காவலர் ஆவார்.

மிகுந்த எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும் பணிக்கு சேர்ந்த நஸ்ரியாவுக்கு பலத்த அதிர்ச்சி காத்திருந்தது. தினம் தினம் அவர் அவமானத்தை சந்திக்கவேண்டி இருந்தது. சக காவலர்கள், மேலதிகாரிகளால் அவமானம் அடைந்தார். திருநங்கை என்கிற ஒரே காரணத்தால் காவல்துறையில் உள்ள அதிகார மனோபாவத்தை வைத்து நஸ்ரியாவை தினம் தினம் வதைக்க ஆரம்பித்துள்ளனர்.

ஆரம்பத்தில் எல்லாம் சரியாகிவிடும் என அவர் நினைத்தார். ஆனால் போகப்போக அது அதிகரிக்கவே, தாங்க முடியாத மன உளைச்சலுக்கு ஆளானார். மேலதிகாரிகளிடம் புகார் அளித்தும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை.

ஆயுதப்படை ஓஎஸ் டூட்டி சீனியர் எழுத்தர் பார்த்திபன், எஸ்.எஸ்.ஐ. ஜெயசீலன், ஆயுதப்படை ஆய்வாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் தனது ஒழுக்கம் பற்றியும், கண்ணியம் குறித்தும் மனம் நோகும்படி தொடர்ந்து விமர்சித்ததால் தான் மனமொடிந்து தற்கொலை செய்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நஸ்ரியா வாட்ஸ் அப்பில் காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில், தனது தற்கொலைக்கு மேற்கண்ட மூவரும்தான் காரணம் என்றும் தனக்கு வாழப்பிடிக்கவில்லை என்றும்கூறி எலி மருந்து குடித்து தற்கொலை செய்துக்கொள்வதாக கூறும் அவர் எலிமருந்தை பாட்டிலில் உள்ள தண்ணீரில் கலக்கிறார். தனது தற்கொலைக்கு காரணமான மூவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர் மருந்தைக் குடிக்கிறார்.

தற்கொலைக்கு முயன்ற நஸ்ரியா சக காவலர்களால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் உடல் நலம் தேறினார். காவல்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போது நஸ்ரியா வெளியிட்ட காணொளி பெரும் வைரலாகி வருகிறது.

காவல்துறையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக திருநங்கையர் பணியில் போராடி சேர்கின்றனர். ஆனால் அவர்களது நிலையைப்பார்த்து இரக்கப்பட்டு கைதூக்கி விடவேண்டிய காவலர்கள் ஆணாதிக்க, செல்லரித்துப்போன மனநிலையுடன் அவர்களை அணுகுவது காவல்துறையில் தவிர்க்கப்படவேண்டிய ஒன்று என்பதையே இச்சம்பவம் எடுத்துக்காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.