கோவை: கல்லூரி மாணவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத வழக்கு !

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 10:42 pm

coimbatore-non-bailable-case-on-students

கல்லூரி மாணவர்களின் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், கல்வி உதவி தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை சேர்ந்த இரண்டு மாணவர் மீது  பிணையில் வர முடியாத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கோவையில், கல்வித்துறையில் மாணவர் சேர்க்கை முதல் துணைவேந்தர் நியமனம் வரை வெளிப்படையான ஏலம் நடப்பதாகவும், மாணவர்களுக்கான கல்லூரி கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இக்கோரிக்கைகளுடன் நிலுவையில் உள்ள கல்வி உதவி தொகையை வழங்க வேண்டும், இலவச பேருந்து பயண அட்டைகளை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் அவ்வமைப்பை சேர்ந்த மாணவர்கள் கோவை அவினாசி சாலையிலுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவ சிலையிடம் மனு அளித்தனர்.

மனுவை அளித்த பின்னர் அம்மாணவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததை கண்ட அதிமுகவினர் சிலர்  அவர்களை கண்டித்ததுடன் திடீரென தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதையடுத்து அங்கு விரைந்து வந்த பந்தையசாலை காவல்நிலைய போலீசார் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது.  

இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடியுள்ளனர். அதில், அரவிந்த், மணிமாறன் ஆகிய இரு மாணவர்களையும்  பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இந்த இரு மாணவர்கள் உட்பட 10 பேர் மீது, கொலை மிரட்டல், அனுமதி இன்றி கூடுதல் உட்பட மூன்று பிரிவுகளில், பிணையில் வெளி வர முடியாத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து, அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளில் ஒருவர் எமது நியூஸ் டிஎம் செய்தியாளரிடம் பேசியபோது, பொதுவாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி காவல்துறையினர் அழைத்துச் சென்று, அன்று மாலையே விடுவித்து விடுவது வழக்கம். ஆனால், ”மேல் இடத்தில்” இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக மாணவர்கள் மீது பிணையில் வெளி வர முடியாத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.