கோவை: சாலையோரம் வரும் காட்டு யானைகளை தடுக்கும் பணிகள் தீவிரம்!

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 01:44 pm
kovai-elephants-issue

வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி சாலையோர புற்களை தேடி மேய்ச்சலுக்கு வரும் காட்டு யானைகள், தடுக்கும் வகையில், மேட்டுப்பாளையம் - நீலகிரி மலைப்பாதையோரங்களில் வளர்ந்து நிற்கும் புற்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை மற்றும் கோத்தகிரி செல்லும் சாலைகள் இரண்டும் மலை சார்ந்த அடர்ந்த வனத்தை ஊடுருவியே செல்கிறது. சாலையின் இருபுறமும் காடுகள் என்பதால் குறிப்பிட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்தவோ, விலங்குகளைப் புகைப்படங்கள் எடுப்பதோ, அவற்றுக்கு உணவுப் பொருட்கள் வீசுவதோ தடை செய்யப்பட்டுள்ளது. 

கோவை - நீலகிரி மாவட்டங்களை இணைக்கும் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில், அவ்வப்போது யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இந்த சாலைகளை கடந்து செல்வதும் வழக்கம்.

இவ்வாண்டு போதிய அளவு மழைப்பொழிவு இருந்ததாலும், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் சாரல் மழை பெய்த காரணத்தினாலும், சாலையோரங்களில் புற்கள் நன்கு வளர்ந்து விட்டன. சாலையின் இரு பக்கமும் இரண்டடி வரை வளர்ந்து விட்ட இந்த பசுமையான புதுப்புற்களை உண்ண காட்டு யானைகள் விரும்புவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

வனத்தில் உள்ள செடி, கொடிகள் மற்றும் மரக்கிளைகளை உடைந்து தீவனமாக கொள்ளும் யானைகள், சுவையும், நீர்சத்தும் அதிகமுள்ள இப்புற்களை உண்ண சாலையோரங்களில் சுற்றித் திரிக்கின்றன. புல் மற்றும் அருகில் உள்ள சிறு சிறு செடிகளை மேய்ந்தபடி யானைகள் நிற்பதால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் ஆழ்ந்து விடுகின்றனர்.

சில நேரங்களில் சாலையை முற்றிலுமாக யானைகள் மறித்தபடி நிற்பதால் போக்குவரத்து தடைப்படுகிறது. சிலர் யானைகள் நிற்கும் போதே, ஆபத்தான வகையில் வாகனத்தை வேகமாக செலுத்தி அவற்றின் அருகிலேயே கடந்து செல்கின்றனர். 

இதுபோன்ற நடவடிக்கைகள் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் வனத்துறையினரின் வேண்டுகோளின்படி தற்போது சாலையோர புற்களை அகற்றும் பணியினை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மோட்டார் பொருத்தப்பட்ட கருவிகள் மூலம் 20-க்கும் மேற்பட்டோர் சாலையின் இருபுறமும் வளர்ந்து நிற்கும் புற்கள் மற்றும் செடிகளை அகற்றி வருகின்றனர். இவ்வழியே, பயணிப்பவர்களின் பாதுகாப்பு கருதி சாலையோரங்கள் சீர் செய்யப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close