11ஆம் ஆண்டு கோவை விழா !

  டேவிட்   | Last Modified : 04 Jan, 2019 04:56 pm
11th-year-kovai-vizha

கோவையின் புகழையும் வரலாற்றையும் பறைசாற்றும் விதமாக பதினோராம் ஆண்டு விழா இன்று தொடங்கியுள்ளது. வருகிற 12-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவின் முதல்நாளான இன்று டபுள் டெக்கர் பேருந்து மூலம் கோவை மாநகரில் வலம் வரும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

கோவை மாநகர் உருவான வரலாற்றையும் கோவையின் புகழையும் அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.கோவையிலுள்ள தொழில் அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள், சமூக அமைப்புகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இணைந்து நடத்தும் இவ்விழாவில் கோவை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகிறது. 

அந்த வகையில் பதினோராம் ஆண்டு கோவை விழா இன்று துவங்கியுள்ளது. உணவுத் திருவிழா, புகைப்படக் கண்காட்சி, கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகள், பழங்குடியினரின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி என சுமார் 130 நிகழ்ச்சிகள் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ள நிலையில் விழாவின் முதல் நிகழ்ச்சியாக டபுள் டக்கர் பேருந்து பயணம் துவக்க விழா இன்று நடைபெற்றது.

முன்னதாக கோவை வ உ சி பூங்கா முன்பாக பேருந்து பயணத்தை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன்,காவல் ஆணையர் சுமித் சரன் மற்றும் சமூக ஆர்வலர் அன்பரசன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். இப்பேருந்து பயணம் தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு மணி நேர இடைவெளியில் இயக்கப்படும் எனவும் வ உ சி பூங்கா முதல் அவினாசி சாலை வழியாக கொடிசியா வரை இயக்கப்படுகிறது. இலவசமாக பொதுமக்களுக்கு பயண அனுமதி வழங்கப்படும் இப்பேருந்தில் பயணிக்க கோவை விழா மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து பயணம் என்பது கோவைக்கு கிடைத்துள்ள ஒரு சிறந்த வாய்ப்பு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close