சின்ன தம்பியை கும்கி யானையாக மாற்றுவதற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கும் படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் காட்டு யானை சின்ன தம்பியை கும்கி யானையாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா என்பவர் அவசர மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று மாலை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மற்றும் வனத்துறை அதிகாரி சின்ன தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் தற்போது இல்லை எனவும், காட்டுக்குள் அனுப்பவே இரு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், சின்ன தம்பியை கட்டுக்குள் அனுப்ப முடியாத பட்சத்தில் தான் அதை சிறைபிடிக்க நடவடிக்கை எடுப்போம் என கூறினர்.
இதையடுத்து, ஜே.சி.பி இயந்திரம் மூலம் விலங்குகளை ஏற்றுவதால் காயங்கள் ஏற்படுவதாகவும், யானைகள், மற்றும் வன விலங்குகளை கொண்டு செல்லும் போது விதிமுறை வகுக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம், இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
newstm.in