கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம் என தகவல்: லாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 09:09 am
the-public-besieged-the-container-lorry

கோவை உக்கடம் அருகே சென்ற கன்டெய்னர் லாரியில் கட்டுகட்டாக பணம் இருப்பதாக பரவிய தகவலையடுத்து பொதுமக்களை கண்டெய்னர் லாரியை முற்றுகையிட்டனர். 

கோவை உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் நேற்றிரவு பத்து முப்பது மணி அளவில் கன்டெய்னர் லாரி ஒன்று வேகமாக சென்றுள்ளது. கன்டெய்னர் லாரி அதிவேகமாக சென்றதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அதை விரட்டி பிடித்தனர் . அப்போது லாரி ஓட்டுநர் பிரகாஷ் முன்னுக்குப்பின் முரணாக பேசிய  நிலையில், கன்டெய்னர் லாரியில் கட்டுகட்டாக பணம் இருப்பதாக தகவலும் பரவியது . 

இதையடுத்து, அப்பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும்,  காவல் துறையினரும் விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது லாரியில் டீத்தூள் இருப்பதாக லாரி ஓட்டுனர் பிரகாஷ்  தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் கூறுவதை நம்ப மறுத்த பொதுமக்கள் கன்டெய்னர்  லாரியை உடனடியாக திறந்து காட்ட வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களை கலைந்து போக சொல்லி காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால் கூட்டம் கலைந்து செல்லாததால், போலீசார் லேசான தடியடி நடத்தினர். 

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கோவை மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன் , தாசில்தார் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கன்டெய்னர் பூட்டை உடைக்க முயற்சி செய்தனர். ஆனால் முழுமையாக திறக்க முடியாததால் கன்டெய்னர் லாரியை  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு சென்று திறக்கப்பட்டது.

அதில் டீத்தூள்கள் மட்டுமே பண்டல் பண்டல்களாக இருப்பது தெரிய வந்தது. இதனை திமுக உட்பட அரசியல் கட்சியினரும் நேரில் வந்து பார்வையிட்டனர். டீத்தூள் வெள்ளக்கிணறு பகுதியில் ஒரு ஆலையில் இருந்து பேக் செய்யப்பட்டு கொச்சி துறைமுகத்திற்கு அனுப்பபட்டது விசாரணையில் தெரியவந்தது.

ஆனால் ஆட்சியர் அலுவலகம் வந்த திமுகவினர், லாரியில் உள்ள அனைத்து மூட்டைகளையும் இறக்கி சோதனையிட வேண்டும் எனவும், கன்டெய்னரில் முன் பகுதியில் உள்ள மூட்டைகளை மட்டும் சோதனையிடுவதில் உடன்பாடு இல்லை எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து,  இன்று காலை அனைத்து மூட்டைகளையும் இறக்கி ஆய்வு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கன்டெய்னர்  லாரிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close