மீனாட்சி அம்மன் கோவில் பட்டாபிஷேக விழா!

  அனிதா   | Last Modified : 16 Apr, 2019 09:50 am
meenakshi-amman-temple-pattabhishek-festival

மதுரை  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பட்டாபிஷேக நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

இதில், முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் செய்யும் விழா அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கிரீடம் சாற்றப்பட்டு, செங்கோல் வழங்கப்பட்டது.

தொடர்ந்து அம்மனிடமிருந்து செங்கோலைப் பெற்ற கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் அம்மனிடம் செங்கோலை சமர்ப்பித்தார். பட்டாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் தொடர்ச்சியாக மீனாட்சி அம்மன் தடாதகைப் பிராட்டியாக மதுரையில் அவதரித்து ஆட்சி புரிந்த புராணத்தைக் குறிக்கும் வகையில் திக்கு விஜயம்,(16ம் தேதி) இன்றும், விழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சிகளான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் 17ஆம் தேதியும், மாசி வீதிகளில் திருத்தேரோட்டம் வரும் 18-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

மேலும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு வரும் 19ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முக்கிய விழாக்கள் நடைபெறுவதையொட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close