கோடைமழையை பயன்படுத்தி விவசாயிகள் உழவு செய்ய வேண்டும்: கோவை வேளாண்மைத்துறை

  அனிதா   | Last Modified : 25 Apr, 2019 05:14 pm
farmers-should-be-using-summer-rain-coimbatore-agriculture-department

கோவை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கோடை மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் உழவு செய்ய வேண்டும் என வேளாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பானுமதி தெரிவித்திருப்பதாவது :- மானாவாரி நிலங்களில் உழவு செய்யாத கெட்டியான நிலத்தில் விழும் மழைநீர் மண் அரிப்பை ஏற்படுத்தி, வழிந்து வேகமாக நிலத்திலிருந்து வெளியேறி வீணாகிறது. மண்ணில் ஈர்த்துக்கொள்ளப்பட்ட நீரும் வெப்பத்தினால் விரைவில் ஆவியாகி வெளியேறுகிறது. இதனைத் தடுக்க கோடைப் பருவத்தில் கிடைக்கும் மழையைக் கொண்டு, உழவு செய்வதால் மண்ணின் நீர்பிடிப்புத்தன்மை அதிகரிக்கும்.

கோடை உழவினால் களை செடிகளின் விதைகள், பூச்சிகளின் முட்டைகள், மண்ணின் மூலம் பரவும் பூஞ்சாண நோய்கள் ஆகியவற்றை அழிக்கலாம். மேலும், மண்ணிற்குள் எளிதில் காற்றோட்டமும், நீரும் உட்புகும் தன்மை ஏற்படுகிறது. வழிந்தோடும் மழைநீரின் வேகம் தடுக்கப்பட்டு மண் அரிமானம் குறைந்து, மேலடுக்கு மண் இறுக்கத்தை தளர்த்தி மழைநீர் உட்புகும் தன்மை மேம்படுத்த உதவும். 

மழைநீரில் கரைந்துள்ள தழைச்சத்து சேகரிக்கப்படுவதால் மண்வளம் மேம்படுகிறது. மேலும், மக்காச்சோளம் பயிரை தாக்கும் படைப்புழுக்களை கட்டுப்படுத்த கோடை உழவு மிக அவசியம். மக்காச்சோளம் பயிரிடுவதற்கு முன்கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணிலுள்ள கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.

கோடையில் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள் ஊடுபயிர்களும், வயல் ஓரப்பயிர்களும் சாகுபடி செய்வதால், புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். எனவே, விவசாயிகள் தற்போது பெய்துவரும் கோடை மழையைப் பயன்படுத்தி கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும், என தெரிவித்தார். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Loading...
Advertisement:
[X] Close