தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஒருவர் சென்னையில் பிடிபட்டார்!

  Newstm Desk   | Last Modified : 26 Apr, 2019 03:40 pm
one-of-the-terrorists-were-caught-in-chennai

சென்னையில், கிரேட்டர் கூச் பெஹார் லிபரேஷன் ஆர்கனைசேஷன் என்னும் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரை பிடித்து கியூ பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அமைந்தகரை பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்றின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த இளைஞர்களிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அதில் கந்தர்ப்பதாஸ் என்னும் இளைஞர் ஒருவர் மற்றவர்களை பார்த்து தான் உல்பா தீவிரவாதி என்று கூறி மிரட்டியுள்ளார்.

இதனை கவனித்த அங்குள்ள பாதுகாப்பு அதிகாரி ராமதாசு, அவனது பெயரை சமூக வலைதளம் மூலம் சோதனை செய்ததில் அவன் ஏற்கனவே மேற்கு வங்க சி.ஐ.டி போலீசாரால் தீவிரவாதி என கருதப்பட்டு கைது செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து ராமதாசு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கந்தர்ப்பதாஸை கியூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார்.

தொடர்ந்து கந்தர்ப்பதாஸை அண்ணா நகர் காவல் நிலையத்தில் வைத்து கியூ பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இவர்தான் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட கந்தர்ப்பதாஸ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கந்தர்ப்பதாஸ் 3 மாதங்கள் சிறையில் இருந்துவிட்டு 45 நாட்கள் பிணையில் வெளிவந்து சென்னைக்கு தப்பி வந்தது தெரியவந்துள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்ட கிரேட்டர் கூச் பெஹார் லிபரேஷன் ஆர்கனைசேஷன் என்னும் அசாம் தீவிரவாத அமைப்பின் தலைவன் நிர்மல் ராய், கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி தங்கள் அமைப்பு ஒரு முழு அடைப்பை நடத்தவுள்ளதாகவும்,  தங்களுக்கு எதிராக செயல்பட்டால் அரசு அலுவலகங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் குண்டு வைத்து தகர்ப்போம் எனவும் சமூக வலைதளம் மூலம் மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அந்த அமைப்பின் தலைவன் நிர்மல் ராய் உட்பட கந்தர்ப்பதாஸ், ரத்தன், டி.பி பிரசாத் ராய் ஆகிய 4 பேரை மேற்கு வங்க மாநிலம் சில்லிகுறியில் வைத்து சி.ஐ.டி உளவு பிரிவு காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close