கழிவு நீர் கலந்த ஏரி: ஸ்மாட் சிட்டி நிதி இருந்தும் சீரமைக்காத சேலம் மாநகராட்சி!

  அனிதா   | Last Modified : 09 May, 2019 09:38 am
waste-water-mixed-in-salem-lake

சேலம், குமரகிரி ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டு ரசாயன கழிவுகள் கலக்கப்பட்டு நிலத்தடி நீர் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சேலம் மாநகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது இந்த குமரகிரி ஏரி. சுமார் 39 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி சேலம் பகுதியின் முக்கிய நீர் நிலையாக விளங்கி வருகிறது. இந்த ஏரியில் பல ஆண்டுகளாக சாயக்கழிவுகள் கலந்தும், ஏரி தூர்வாரப்படாமலும் இருந்தது. இதையடுத்து ஏரியை தூய்மைப்படுத்தி பராமரிக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக சேலத்தில் உள்ள தனியார் இயற்கை ஆர்வலர்களிடம்  கடந்த 2013-ம் ஆண்டு சேலம் மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைத்தது.

தனியார் இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்களிடம் இருந்தும் பொதுமக்களிடம் இருந்தும் பணம் வசூல் செய்து இந்த ஏரியை தூய்மைப்படுத்தினர்.  பின்பு ஏரியில் பத்தாயிரத்திற்கும்  மேற்பட்ட மரங்கள் நட்டும், ஏரியின் உள்ளே மணல் திட்டு அமைத்தும், பராமரிக்கப்பட்டது.

பொதுமக்கள் நடைபயிற்சி மற்றும் குழந்தைகள் விளையாடுகின்ற வகையில் பூங்கா மற்றும் நடைபயிற்சி தளங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொண்டு சிறப்பாக பராமரித்து வந்த நிலையில், இந்த குமரகிரி ஏரி தனியார் இயற்கை ஆர்வலர்களிடம் இருந்து மீண்டும் சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் பராமரிப்புக்கு செல்வதாகவும், சேலம் ஸ்மாட் சிட்டி நிதி மூலம் ரூ.50 கோடி குமரகிரி ஏரி பராமரிப்புக்கு செலவிட உள்ளதாகவும் மாநகராட்சி அறிவித்தது.

அதன் பிறகு மெல்ல மெல்ல குமரகிரி ஏரி பழைய நிலைக்கு திரும்பியது.  முறையான பராமரிப்பு இல்லாமல், சேலம் மாநகரத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வருகின்ற சாயகழிவுநீர் இந்த ஏரியில் கலந்து இந்த குமரகிரி ஏரி மிகவும் பாழடைந்து காணப்படுவதுடன் அதிக அளவில் துர்நாற்றம் வீசி வருகின்றது.

தூரத்திலிருந்து காணும் பொழுது இயற்கை எழில் கொஞ்சும் வகையில் காணப்படும் இந்த ஏரி, அருகில் சென்றதும் முகம் சுளிக்கும் வகையில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் இந்த ஏரியில் வாழும் பல ஆயிரக்கணக்கான பறவைகள்  இந்த துர்நாற்றத்தில் அழிந்து வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏரி முழுவதையும் ஆகாய தாமரை சூழ்ந்துள்ளது.  

இந்த ஏரியை சுற்றியுள்ள சாயப் பட்டறைகளில் இருந்து வெளிவரும் ரசாயன கழிவு நீர்  ஏரியில் கலப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இந்த ஏரியை தூய்மைப்படுத்தி சாக்கடை நீரை வெளியேற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close