கள்ளத் தொடர்பு விவகாரம்: கடத்தப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர் மீட்பு!

  அனிதா   | Last Modified : 09 May, 2019 01:01 pm
abducted-law-college-student-rescue

சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர் கடத்தப்பட்ட விவகாரத்தில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை நீலாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சாலமன். சட்டக் கல்லூரி மாணவராக பயின்று வரும் இவருக்கும் வெட்டுவாங்கன்னி பகுதியைச் சேர்ந்த முகம்மது ஆரிப் என்பவரது மனைவி பிரியா (எ) பத்மாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காலப்போக்கில் எல்லை மீறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் பிரியா அவரது கணவர் முகம்மது ஆரிப் உடன் சண்டையிட்டு தாய் வீட்டிற்கு செல்வதாகக் கூறிச் சென்றுள்ளார். ஆனால் அவர் தாய் வீட்டிற்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் சாலமனும் பிரியாவும் தொடர்பில் இருப்பதை அறிந்த முகம்மது ஆரிப் அவர்களை தேடி வந்துள்ளனர். அப்போது, சாலமன் முகம்மது ஆரிபிடம் சிக்கியதாகவும், சாலமனை முகம்மது ஆரிப் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்திச் சென்று அடித்து உதைத்ததாகவும் சாலமனின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, அவரது பெற்றோர் சாலமனை காணவில்லை என்றும் முகம்மது ஆரிப் தான் கடத்தி சென்றுள்ளதாகவும் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், சாலமனை முகம்மது ஆரிப் சென்னை அண்ணா நகர் பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அண்ணா நகர் காவல்துறையின் உதவியுடன் அங்கு சென்ற நீலாங்கரை காவல்துறையினர் அங்கிருந்து சாலமனை மீட்டதோடு அவரை கடத்தி வந்த முகம்மது ஆரிப் மற்றும் அவரது நண்பர்களான கதிர்வேல், விக்னேஷ், பரத் மற்றும் மஞ்சுளா என்ற பெண்ணையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மீட்கப்பட்ட சாலமன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close