மின்சாரம் தாக்கி உயிரிழந்த கணவரின் இழப்பீடு தொகையை பெற்று தரக்கோரி, பெண் ஒருவர் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
திருச்சி அருகே மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் தனது மனைவி லட்சுமி மற்றும் தனது 3 குழந்தைகளுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவை, வடவள்ளி அண்ணாநகர் பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஒண்டிப்புதூர் அருகே கட்டுமான பணிக்கு சென்ற பழனிச்சாமி, கடப்பாரையால் மண்ணைத் தோண்டிய போது நிலத்தின் அடியில் பதிக்கப்பட்டிருந்த மின் கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்ட பெரியசாமி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் கட்டுமான பணி நடைபெற்ற வீட்டின் உரிமையாளர் ரூ.6 லட்சம் கொடுப்பதாக கூறி அவரது வழக்கறிஞரிடம் காசோலையாக வழங்கியுள்ளார்.
ஆனால், அவரது வழக்கறிஞர் காசோலையின் நகலை மட்டும் தன்னிடம் கொடுத்ததாகவும், தற்போது 3 குழந்தைகளுடன் வாழ வழியின்றி தவித்து வருவதாகவும் கண்ணீர் மல்க கூறும் லட்சுமி, இழப்பீட்டு தொகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி இன்று தனது குழந்தைகளுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
newstm.in