திருச்சி நகர்புற சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இன்றி செவிலியர்கள் பிரசவம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், அரசு போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் எடமலைப்பட்டிபுதூர், கிராப்பட்டி, இபிகாலணி, காவலர்குடியிருப்பு மற்றும் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் இங்கு கடந்த 5 மாதங்களாக போதிய மருத்துவர்கள் இன்றி தினசரி செவிலியர்களே மருந்து, மாத்திரைகளை வழங்குவதுடன், நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு இதுவரை 16 பிரசவம் பார்க்கப்பட்டள்ளதாகவும், அதில், ஒரு ஆண் குழந்தை இறந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழாதவாறு தடுக்க மாநகராட்சி சுகாதார நிலையத்தில் மருத்துவர்களை நியமிக்கவேண்டும் என்றும், மருத்துவர் இன்றி பிரசவம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, மாநகராட்சி நகர்நல அலுவலரிடம் பொதுமக்கள் சார்பில் இதுகுறித்து பேசிமுடிவெடுக்க ஒப்புதல் அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
newstm.in