தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு!

  அனிதா   | Last Modified : 13 Jun, 2019 01:30 pm
case-registered-against-6-people-for-plotting-terror-attack-in-south-india

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் போன்று தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட  கோயம்புத்தூரைச் சேர்ந்த 6 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளியான சஹரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த  ஒருவர் கேரள மாநிலம் கொச்சியில் கடந்த மாதம் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களை அடிப்படையில் கோயம்புத்தூரில் உள்ள 7 இடங்களில் நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

அப்போது, சஹரான் ஹாசிமின் முகநூல் நண்பரான கோவையை சேர்ந்த முகமது அசாருதீன் (32) சமூக வலைதளங்கள் மூலம் ஐ.எஸ்.பயங்கரவாத கொள்கைகளை பிரசாரம் செய்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி அதன் மூலம் சிக்கும் இளைஞர்களின் உதவி கொண்டு இலங்கையைப் போன்று இந்தியாவிலும் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளார். இந்த தகவல் கொச்சியில் கைது செய்யப்பட்டவரிடமிருந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு தெரியவந்ததையடுத்து முகமது அசாருதீன் கைது செய்யப்பட்டார். அதையொட்டி மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனைகளின்போது 14 செல்போன்கள், 24 சிம்கார்டுகள், 10 பென்-டிரைவ், 3 லேப் டாப், 6 மெம்மரி கார்டு, 4 ஹார்டு டிஸ்க் டிரைவ்கள், 13 சி.டி, டிவிடி போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும், பி.எப்.ஐ, எஸ்.டி.பி.ஐ போன்ற அமைப்புகளின் பிரச்சார நோட்டீஸ்களும், தாக்குதலுக்குப் பயன்படும் மின்சாரத் தடி, கொலை செய்யப் பயன்படும் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள், ஏர் துப்பாக்கியில் பயன்படுத்துப்படும் 300 குண்டுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பல கைப்பற்றப்பட்டன. 

இது குறித்து தேசிய புலனாய்வு முகமை தெரிவித்திருப்பதாவது: கொச்சி மற்றும் கோவையில் கைது செய்யப்பட்டிருக்கும் இருவரும் முகநூல் மூலம் ஐ.எஸ் பயங்கரவாத கொள்கைகளை பரப்பி, இளைஞர்களை பயங்கரவாதத்திற்கு ஆதரவாக திரட்டி இலங்கை பயங்கரவாதத்தை போன்று தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

அதற்கு உதவியாக செயல்படுவதற்கு திட்டமிட்டிருந்த முகமது கோவையைச் சேர்ந்த அசாருதீன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முகமது அசாருதீன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கீழ் செயல்பட்டு வந்த அஹ்ரம் சிந்தா (26) ஷீக் ஹிதாயதூல்லா (38), அபுபக்கர் (29) சதாம் ஹுசைன் (26) இப்ராஹீம் என்கிற சாஹின் ஷா (28) ஆகிய 5 பேரும் இன்று (ஜூன் 13) கோவையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close