துணி மூட்டையில் மறைத்து வைத்த ரூ.11 லட்சத்தை துணியோடு தானம் செய்த மகன்!

  அனிதா   | Last Modified : 18 Jun, 2019 08:42 am
the-son-donated-money-in-the-clothes-bundle

திருடனுக்கு பயந்து பழைய துணி மூட்டையில் மறைத்து வைத்திருந்த ரூ.11 லட்சம் பணத்தை மகன் துணி மூட்டையோடு போலி ஆதரவு இல்லத்திற்கு தானாமாக அளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.  

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் சுசீலா. இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். கடந்த 13ம் தேதி தேனாம்பேட்டை பகுதிக்கு  ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அம்மா அறக்கட்டளை என்ற பெயரில் ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்கு இலவசமாக சேவை செய்து வருவதாகவும் அதற்கு உங்களால் ஆன உதவிகளை வழங்கவேண்டுமென பிரசுரம் ஒன்றை கொடுத்து வீடுவீடாகச் சென்று பழைய துணி மற்றும் சிறிய அளவிலான தொகைகளை பெற்று சென்றுள்ளனர்.

சுசிலா வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் அவரது மகன் வீட்டில் இருந்த ஒரு பழைய துணி மூட்டையை  துணி சேகரிக்க வந்த ஒரு பெண்மணியிடம் கொடுத்துள்ளார். பணி முடிந்து வீட்டிற்கு வந்த சுசிலா பழைய துணி மூட்டை குறித்து கேட்ட போது அவரது மகன் நடந்ததை கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுசிலா கதறி அழுதுள்ளார்.

அதன் பிறகு தான் தெரியவந்தது புது வீடு வாங்குவதற்காக சிறுக சிறுக சேமித்த ரூ.11 லட்சம் பணத்தை திருடனுக்கு பயந்து பழைய துணி மூட்டையில் கட்டி வைத்துள்ளார் என்பது. 

இதைக் கேட்ட மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்தது. உடனடியாக சுசிலா தனது கணவருடன் துண்டு பிரசுரத்தில் உள்ள  முகவரிக்கு சென்று  அங்கு விசாரணை நடத்தினர். ஆனால் துண்டு பிரசுரத்தில் உள்ள  முகவரியில்  பாழடைந்த ஓட்டு  கொட்டகை மட்டுமே இருந்துள்ளது.  இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த சுசிலா உடனடியாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் தேனாம்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். சிசிடிவி கேமராவில் துணி சேகரிக்க வந்த ஆட்டோவின்  பதிவு எண்ணை வைத்து ஆட்டோ உரிமையாளரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர் ஆட்டோ ஓட்டுநர் மகாலட்சுமி என்கிற பெண் தான் வாடகைக்கு ஆட்டோ எடுத்ததாக கூறியுள்ளார்.

இதனை அடுத்து மகாலட்சுமியை போலீசார் தேடி வந்தனர். செங்குன்றம் பகுதியில் இருந்த அவரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் முதலில் பணத்தை எடுக்கவில்லை என கூறியுள்ளார். பின்னர் பணத்தை திருடியதாக ஒப்புக் கொண்டார். பின்னர் அவரது வீட்டிலிருந்த ரூ.11லட்சம் ரூபாயயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் மகாலட்சுமி அளித்த வாக்குமூலத்தில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்தன. போலியான அறக்கட்டளையின் பெயரை பயன்படுத்தி பணம், காசோலை மற்றும் பழைய துணிகளை பெற்று பணம் சம்பாதிக்க சென்னையில் ஒரு பெரிய கும்பலே செயல்படுவதாகவும் பணத்தை வாரத்திற்கு ஒரு முறை தங்களுக்குள் பங்கு போட்டு கொள்ளவும் அதேபோல் சேகரிக்கும் பழைய துணிகளை பழைய துணி வாங்கும் மொத்த ஏஜெண்டுகளிடம் விற்று அதன் மூலம் பணம் சம்பாதிப்பதும் தெரிய வந்தது.

இந்த கும்பல் ஏழ்மை நிலையில் உள்ள பெண்களிடம் தினமும் வேலை செய்ய ஆள் தேவை நாளொன்றுக்கு 300 முதல் 500 ரூபாய் கிடைக்கும் என கூறி அவர்கள் கொடுக்கும் துண்டு பிரசுரங்களை வீடுவீடாகச் சென்று கொடுத்து பணம் துணிகளை பெறுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் சென்னை முழுவதும் எந்தெந்த பகுதியில் நடுத்தர மற்றும் ஏழ்மையான பகுதி மக்கள் உள்ளனரோ அவர்களை குறிவைத்து இந்த செயலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து, அம்மா அறக்கட்டளை அரவிந்தன் என்பவரின் பெயரில் பதிவு செய்யபட்டுள்ளதை கண்டுபிடித்த போலீசார், அரவிந்தன் குறித்து விசாரணை மேற்கொண்டதில், மக்கள் நம்பிக்கை என்கிற வார இதழ் நடத்தி வருவதும், காவல் ஆணையர் உள்ளிட்ட பிரபலங்களுடன் நெருக்கமாக இருப்பது போல் புகைப்படம் எடுத்து வைத்துகொண்டு பலரிடம்  போலி அறக்கட்டளை பெயரில் பண வசூலீல் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, தலைமறைவாக உள்ள அரவிந்தனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close