அரியமங்கலம் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் சுமார் 47 ஏக்கர் பரப்பளவில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில், நாள் தோறும் சுமார் 200 டன் குப்பைகள் கொட்டப்படுகிறது. இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளை அப்புறப்படுவதற்குள் மேலும், மேலும் குப்பைகள் சேர்ந்து தற்போது 7.59 லட்சம் கன மீட்டர் உயரத்திற்கு குப்பைகள் மலை போல் குவிந்துள்ளன.
இந்த குப்பைக் கிடங்கில் கோடைகாலம் மட்டுமன்றி அவ்வப்போது தீப்பிடித்து எரிவது வழக்கமான ஒன்று. கடந்த மாதம் 7ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தின் போது மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 2 நாட்கள் போராடி தீயை அணைத்தனர். இந்நிலையில், இன்று காலை இந்த குப்பை கிடங்கில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தால் அரியமங்கலம் முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்றவைகளால் அவதிப்பட்டனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட், நவல்பட்டு தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
newstm.in