திருச்சி: வெகுவிமர்சையாக நடைபெற்ற உத்தமர்கோயில் கும்பாபிஷேகம்!

  அனிதா   | Last Modified : 11 Sep, 2019 10:54 am
temple-celebration

மண்ணச்சநல்லூர் அருகே  உள்ள அருள்மிகு உத்தமர்கோயில் கும்பாபிஷேகம் விழாவில்  அமைச்சர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ளது அருள்மிகு உத்தமர்கோயில். முப்பெரும் தேவியருடன் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள  ஓரே ஆலயம் இது. பிச்சாண்டார்கோவில் என்றழைக்கப்படும் இவ்வூரும், உத்தமர்கோயிலும் சைவ, வைணவ  ஒருமைப்பாட்டிற்கு சான்றாக விளங்குகின்றன. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம்  செய்யப்பட்டதும், 108  வைணவ திவ்ய தேசங்களில் 5 வது திருப்பதியாகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களை மேற்கொள்ளும் பிரம்மாவுக்கு தனி சன்னதி  அமைந்திருப்பதும் இக் கோயிலில் தான்.

கடந்த 2003 ம் ஆண்டு  ஜனவரி 27 ம் தேதி  இக்கோயில் கும்பாபிஷேகம்  நடத்தப்பட்ட நிலையில்  மீண்டும் குடமுழுக்கு நடத்த முடிவு செய்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருப்பணிகள் தொடங்கியது. பல்வேறு  உபயதாரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் அண்மையில் நிறைவு பெற்றதனைத் தொடர்ந்து கடந்த 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிகழாண்டில் செப்டம்பர் 11ம் தேதி  இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 8 ம் தேதி முதற்கால பூஜையும், 9 ம் தேதி இரண்டாம் கால, மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும், அஷ்ட பந்தனமருந்து சாத்துதலும், 10 ம் தேதி நான்காம் கால மற்றும் ஐந்தாம் கால யாக சாலை பூஜைகளும் நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்று காலை 5 மணிக்கு ஆறாம் கால யாக சாலை பூஜையும், 6 மணிக்கு பூர்ணாஹூதி, யாதாராதான் பூஜையும் நடைபெற்றது. பின்னர், காலை 6.15 மணியளவில் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து, காலை 7.15 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம்  வெகுவிமர்சையாக நடைபெற்றது.

விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பிச்சாண்டார்கோயில், நொச்சியம், மண்ணச்சநல்லூர், பழூர், கூத்தூர், தாளக்குடி போன்ற சுற்றுவட்டார பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close