தேர்தலில் கோஷ்டி மோதல்! திமுக தொண்டர் அரிவாளால் வெட்டிக் கொலை!

  முத்து   | Last Modified : 31 Dec, 2019 12:33 pm
an-election-dispute-admk-kill

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட 5 பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு லதா, இளையராஜா, மணி ஆகிய 3 பேர் போட்டியிட்டனர். மேட்டூரில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடியில் 5 மணிக்கு பிறகும் அதிகமானவர்கள் வரிசையில் நிற்க வாய்ப்பு இருப்பதாக தெரிந்தது. அப்போது வாக்குச்சாவடியில் இருந்த முகவர்கள் வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்க அறிவுறுத்தினர். இதற்கு முகவர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குச்சாவடியில் இருந்த முகவர்களுக்கு இடையே லேசான சலசலப்பு ஏற்பட்டது.

அதே நேரத்தில் வாக்குச்சாவடிக்கு வந்த ஒரு தரப்பு ஆதரவு வாக்காளரை, அங்கு வெளியே இருந்த மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் வெளியேற்றினர். இதனால் வாக்குச்சாவடிக்கு வெளியில் நின்று கொண்டு இருந்த இருதரப்பினர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அருகில் இருந்த வீடுகளுக்கு சென்று அரிவாளை எடுத்து வந்து மோதலில் ஈடுபட்டனர். இதில் வேட்பாளர் லதாவின் கணவரும், ஓட்டப்பிடாரம் ஐக்கிய வியாபாரிகள் சங்க தலைவருமான மாசானசாமி (வயது 54), அவரது ஆதரவாளர் 3 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அதேபோல் மற்றொரு தரப்பை சேர்ந்த ஓட்டப்பிடாரம் தி.மு.க. நகர செயலாளர் பச்சைபெருமாள் (55), அவரது மகன் ஜெயமுருகன் (28) ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவரது ஆதரவாளர்கள் குவிந்ததால் பரபரப்பு எற்பட்டது. 
இதனிடையே, திமுக தரப்பைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரை ஒரு கும்பல் விரட்டினர். சிறிது தூரம் ஓடிய மாரியப்பன் தவறி விழுந்ததால் அவர் தலையில் கல்லைப்போட்டு அக்கும்பல் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவங்களால் ஓட்டப்பிடாரம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சிலரை பிடித்து விசாரணை நடத்தி வரும் நிலையில் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close