பின்னணியில் 10 தகவல்கள்: பாலிடெக்னிக் முறைகேடும் விரிவுரையாளர் தேர்வு ரத்தும்

  Saravanan   | Last Modified : 10 Feb, 2018 11:06 am


தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவில் நடந்த முறைகேட்டின் எதிரொலியாக, 1.33 லட்சம் பேர் எழுதிய அந்தத் தேர்வு அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னணி குறித்த 10 தகவல்கள்:

* அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு 2017 செப்டம்பரில் எழுத்துத் தேர்வு நடந்தது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய அந்தத் தேர்வை 1.33 லட்சம் பேர் எழுதினர். 

* 2018 நவம்பர் 7-ல் தேர்வு முடிவு வெளியான நிலையில், பலரும் லஞ்சம் கொடுத்து மதிப்பெண்களைத் திருத்தி முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. 

* தேர்வு முடிவில் குளறுபடிகள் இருப்பதாக தேர்வர்களிடம் இருந்து தேர்வு வாரியத்துக்கு புகார்கள் வந்தன. அதாவது பலர் பணம் கொடுத்து மார்க் பட்டிலை திருத்தியதாக புகார்கள் கூறப்பட்டன. இதனால் தேர்வு முடிவு திரும்ப பெறப்பட்டது.

* 2018 டிசம்பர் 11-ல் இணையத்தில் வெளியிடப்பட்ட விடைத்தாள்களிலும், எழுத்துத் தேர்வு முடிவிலும் வித்தியாசம் இருப்பது கண்டறியப்பட்டது. 

* இந்த முறைகேடு தொடர்பான செய்தி, 'டெக்கான் க்ரானிக்கல்' நாளிதழில் விரிவாக வெளியானது. எழுத்துத் தேர்வில் கூடுதலாக போலி மதிப்பெண்கள் வழங்கப்பட்டதன் மூலம் 200 பேர் தேர்ச்சி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. 

* இந்த முறைகேட்டின் மூலம் தேர்ச்சி பெறுவதற்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

* பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவில் முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீஸார், தொடர்புடைய தேர்வர்கள், அதிகாரிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் என 156 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். 

* தொடர்புடையவர்கள் மீது மோசடி, நம்பிக்கை மோசடி, ஆவணங்களை திருத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

* விசாரணை தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இந்த முறைகேட்டில் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது. இந்தச் சூழலில்தான் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. 

* தேர்வு ரத்து குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அரசு தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் நேரடி நியமனத்துக்காக 16.9.2017 அன்று நடத்தப்பட்ட போட்டி எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. தேர்வுக்கான விளம்பரம் 2018 மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு, ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வுக்கான தேதி ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரைவில் அறிவிக்கப்படும். ஏற்கெனவே விண்ணப்பித்த தேர்வர்கள், தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் தேர்வு கட்டணம் செலுத்த தேவை இல்லை. புதிய விண்ணப்பதாரர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.'

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close