தமிழ் பேசினால் செம்மரம் கடத்துபவர்களா? அத்துமீறும் ஆந்திர காவல்துறை

  Newstm Desk   | Last Modified : 30 Apr, 2018 05:45 am


தமிழகத்தை சேர்ந்தவர்கள் பலர் ஆந்திராவில் செம்மரம் கடத்த சென்றதாக கூறி கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

செம்மரக் கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்க ஆந்திர போலீசாருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதிகரிக்கும் இதுபோன்ற கைதுகள் நியாயமானது தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டுமே நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று திருப்பதி தேவஸ்தானத்திற்கு அருகே உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 15 பேரை போலீசார் திடீரென கைது செய்தனர். தங்களுக்கு செம்மரம் கடத்துபவர்கள் பற்றிய துப்பு கிடைத்ததாகவும், அதனால் இவர்களை கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். கைது செய்யும் முன்பு, அங்கு வந்த போலீசார், தமிழ் பேசுபவர்களை தேடியதாக தெரிய வந்துள்ளது. 

கைது செய்யப்பட்டவர்களின் கதி என்னவென்பது பல மணி நேரமாக தெரியாமல் இருந்த நிலையில், மாலை அவர்கள் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அவர்கள் செம்மரம் கடத்த வந்தது உறுதி என போலீசார் தெரிவிக்கின்றனர். ஆனால், அதற்கான எந்த ஆதாரமும் தங்களிடம் தற்போது இல்லையென்றும் கூறுகின்றனர். அதனால் அவர்கள் மீது வழக்கு எதுவும் பதியப்படவில்லை.

தமிழ் பேசினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தங்களுக்கு சந்தேகம் ஏற்படுபவர்களை எந்த ஆதரமுமின்றி போலீசார் கைது செய்வது, ஆந்திராவில் வாடிக்கையாகி விட்டது. செம்மரம் கடத்துபவர்களை என்கவுண்டர் செய்த சம்பவங்கள் இன்னொரு பக்கம்.

செம்மரம் கடத்துபவர்களை தீவிரவாதிகளை போல பார்க்கத் துவங்கியுள்ளார்களா? என்ற கேள்வி கூட நமக்கு எழுகிறது.

இதுபோன்ற கைதுகளாலும், நடவடிக்கைகளாலும் பெரிதும் பாதிக்கப்படுவது கூலித் தொழிலாளர்கள் தான். செம்மரம் கடத்தத் தான் செல்கிறோம் என தெரியாமல் கூட பலர் இதில் சிக்கிக் கொள்வதுண்டு. அவர்களை அனுப்பிய பெரு முதலாளிகள் பக்கம் இதுபோன்ற விசாரணைகள் செல்வதே இல்லை. 

தமிழக அரசும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆந்திர அரசுடன் சேர்ந்து எல்லையில் உள்ள கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். ஆந்திர போலீசாரின் நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டு வரவும், விதிமுறைகளை சரியாக கடைபிடிக்கவும் போதுமான அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், செம்மரம் வெட்ட செல்பவர்கள் மட்டுமல்லாமல், தமிழ் பேசுபவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அப்பாவி மக்களும் இதில் சிக்கி விடக் கூடும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close