சமயபுரம் அம்மனுக்குக் கோபம்... ஆட்சிக்கு ஆபத்து! - ஜீயர் எச்சரிக்கை

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 26 May, 2018 04:06 pm

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் யானை மிதித்து பாகன் கஜேந்திரன் உயிரிழந்த சம்பவத்தால் தமிழக ஆட்சியாளர்களுக்குப் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக ஶ்ரீரங்கம் ஜீயர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று காலையில், சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மசினிக்கு திடீரென்று மதம் பிடித்தது. யானையைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்ற பாகன் கஜேந்திரனை, மசினி தூக்கி வீசி, மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், யானையை அமைதிப்படுத்திய வனத்துறை அதிகாரிகள், இரவு நேரத்தில் அதை அதன் இடத்துக்குக் கொண்டு சென்றனர். கோவிலுக்குள் உயிரிழப்பு ஏற்பட்டதால், உடனடியாகக் கோவில் நடை அடைக்கப்பட்டது. பின்னர், தோஷம் நீங்க சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பலி பூஜைகள் நிறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் நடை திறக்கப்பட்டது. 

இந்தநிலையில், இந்தச் சம்பவம் குறித்து ஶ்ரீரங்கம் ஜீயர் செண்டலங்கார செண்பக மன்னார் சுவாமிகள் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "ஶ்ரீரங்கம் பெருமாளின் தங்கையாக இருப்பவர்தான் சமயபுரம் மாரியம்மன். கடந்த வியாழக்கிழமை யாரோ மர்ம நபர்கள் கோவிலின் கருவறைக்குள் மர்ம பொருளை வீசிச் சென்றனர். இதனால், சமயபுரம் மாரியம்மனுக்குக் கோபம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கோபத்தின் காரணமாகத்தான் கோவிலுக்குள் இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள ஆட்சிக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது" என்றார். 

இதைத் தொடர்ந்து மாரியம்மனின் கோபத்தைத் தணிக்கும் சிறப்புப் பூஜைகளில் கோவில் குருக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close