பேச்சுவார்த்தைக்கு பின் பிரதீபாவின் உடல் ஒப்படைப்பு

  Newstm Desk   | Last Modified : 05 Jun, 2018 04:49 pm
pradeepa-s-body-handed-over-to-her-parents

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபாவின் உடல் உடற்கூறாய்வுக்கு பின் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

மருத்துவ நுழைவுத் தேர்வான  நீட் தேர்வு முடிவுகள் நேற்று அவசர அவசரமாக வெளியானது. இதில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி 39 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார். ஆனால் இவர், 10ம் வகுப்பு தேர்வில் 500க்கு 490ம் பிளஸ் 2 தேர்வில் 1200க்கு 1125 மதிப்பெண்களும் பெற்றிருந்தார். மேலும் கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் அவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கும். ஆனால், நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் அவருக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில்தான் இடம் கிடைத்தது. மேலும், அரசு சித்த மருத்துவக் கல்லூரியிலும் சீட் கிடைத்தது. இதனால், இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிக்கலாம் என்று நினைத்தார். ஆனால், 40-க்கும் மேற்பட்ட கேள்விகள் தவறானதாக இருந்தது. 60-க்கும் மேற்பட்ட பிழைகள் இருந்தது. இதனால் அவரால் சரியாக எழுத முடியவில்லை.  தேர்வில் தோல்வியடையவே அவர் தற்கொலை செய்துகொண்டார். அனிதாவின் மரணத்திற்கு பிறகு, பிரதீபாவின் மரணம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. 

இந்நிலையில் அவரது உடலுக்கு உடற்கூறாய்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. நீட் தேர்வுக்கு தமிழகத்தில் விலக்கு அளிக்க அரசு உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என பிரதீபாவின் உறவினர்கள் முழக்கமிட்டனர். இதையடுத்து கலெக்டர் மற்றும் காவல் துறையினர் பிரதீபாவின் பெற்றோர், உறவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வழக்கம்போல் சொல்லப்படும் சமாதானம் சொல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாக கலெக்டர் உறுதி அளித்துள்ளார். இதையடுத்து உடற்கூறாய்வு செய்யப்பட்ட பின்பாக அவரது பெற்றோரிடம் பிரதீபாவின் உடல் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது சொந்த ஊரான பெரவலூருக்கு உடல் கொண்டு சென்று இறுதி மரியாதைக்கு பின் அங்கு அடக்கம் செய்யப்படுகிறது.

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close