பசுமை வழிச்சாலை அமைப்பதில் என்ன தவறு?- முதல்வர்

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2018 12:38 pm

tn-government-is-very-sure-about-eight-lane-green-corridor-project-cm

சென்னை-சேலம் இடையேயான பசுமை வழிச்சாலை அமைப்பதில் என்ன தவறு? என்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் கேள்வி எழுப்பி உள்ளார். 

சென்னை - சேலம் இடையேயான பசுமை வழிச்சாலை அமைக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழக சட்டபேரவையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை  மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது தி.மு.க எம்.எல்.ஏ ஐ.பெரியசாமி, "சென்னை- சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது விட்டது" என்று கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "பசுமை வழிச்சாலை அமைப்பதில் என்ற தவறு. தி.மு.க ஆட்சியில் செய்ய கோட்டை விட்டதை நாங்கள் செய்கிறோம். மத்திய அரசிடம் போராடி இந்த சாலையை அமைக்க அனுமதி பெற்றுள்ளோம். தமிழக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளது. படிப்படியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும். சென்னையில் இருந்து சேலத்திற்கு அதிகமான மக்கள் சென்று வருகின்றனர். மக்களின் பயன்பாட்டிற்காக தான் இதனை செய்கிறோம். இதனால் பயண நேரம் குறையும். தி.மு.க தனது ஆட்சியின் போது கார்ப்ரேட்டிற்காக தான் சாலை அமைத்ததா?

இந்த சாலையில் 3 லட்சம் மரங்கள் நட திட்டமிட்டு உள்ளோம். இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று சில கட்சிகள் பொய் பிரசாரம் செய்து வருகின்றன. கையகப்படுத்தப்பட்ட 1900 ஹெக்டர் நிலத்தில் 400 ஹெக்டர் நிலம் அரசாங்கத்திற்கு சொந்தமானது. எனவே, பசுமை வழிச் சாலை அமைந்தே தீரும்" என்றார். 

அதன்பின் பேசிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், "விவசாயிகள் மிக பெரிய போராட்டத்தை நடத்த தயாராகி வருகின்றனர். மீண்டும் தூத்துக்குடியில் நடந்தது போல ஒரு சம்பவம் நடக்க கூடாது. மக்களின் கருத்துக்களை கேட்டு தான் அரசு எதையும் செயல்படுத்த வேண்டும்" என்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close