25-06-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2018 04:58 pm
25-06-2018-newstm-top-10-news

இன்றைய நாளுக்கான டாப் 10 செய்திகள்!

ஜூலை 18 முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடத்துவது குறித்து இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை முடிவில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஜூலை 18ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க தயார்: ஸ்டாலின்

தமிழக சட்டபேரவையில் ஆளுநர் குறித்து பேச முற்பட்ட ஸ்டாலினுக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து தி.மு.க மற்றும் தோழமை கட்சி உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், "ஆளுநர் ஆய்வு தொடர்ந்தால் தி.மு.க நிச்சயம் தொடர்ந்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தும். மாநில சுயாட்சியை பாதுகாக்க ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கவும் தயார்" என்றார். 

சட்டபேரவையில் "தமிழ்ராக்கர்ஸ்" பற்றி கேள்வி

புதிய படங்கள் வெளியாகும் அன்றே இணையத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் யார் என்று தி.மு.க எம்.எல்.ஏ வைகை சந்திரசேகர் சட்டபேரவையில் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், "அவர்கள் தான் சினிமா துறையை அழித்து வருகின்றனர். தியேட்டருக்கு வந்து சினிமா பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது" என்றும் அவர் கூறினார். 

பா.ம.க - பா.ஜ.க மோதல்: பேருந்து கண்ணாடி உடைப்பு

ராமதாஸை கடுமையாக விமர்சித்த தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்து இன்று தி.நகரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தை நோக்கி பா.ம.கவினர் பேரணியாக சென்றனர். அப்போது இரு கட்சியினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் அங்கிருந்த பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. பின்னர் போலீசார் பா.ம.கவினரை கைது செய்தனர். 

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: 27ல் உச்சநீதிமன்றம் விசாரணை

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தால் மேலும் தாமதம் ஆகும் என்பதால், வழக்கை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது உச்சநீதிமன்றமே இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று டி.டி.வி. ஆதரவு 17 எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சஞ்சய் கிஷன் மற்றும் அருண் மிஸ்ரா இந்த மனு மீது நாளை மறுநாள்(27ம் தேதி) விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர். 

செல்லமேஸ்வர்க்கு பார் கவுன்சில் கண்டனம்

செல்லமேஸ்வர், ஓய்வு பெற்ற பின் ஊடகங்களில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக இந்திய பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய பார் கவுன்சலின் தலைவர் மனன் குமார் மிஸ்ரா சார்பில் இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி மாதம் நடந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு பிறகு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரை சந்தித்தது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

பிக்பாஸ்-2வில் இருந்து வெளியேற கமல் முடிவு?

தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பணியாற்றும் 400 பேரில் மொத்தம் 41 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதை சுட்டிக்காட்டி ஃபெப்சி கண்டனம் தெரிவித்து இருந்தது. இதனால் கமலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே அவர் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடுமையாக பயிற்சி எடுக்கும் இந்திய வீரர்கள்- பிசிசிஐ ட்வீட்

இங்கிலாந்துக்கு எதிரான பெரிய சுற்றுப்பயணத்திற்கு முன், அயர்லாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. வருகிற ஜூன் 27 மற்றும் 29ம் தேதியில், டப்லினில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்காக இந்திய அணி வீரர்கள் கடுமையாக பயிற்சி பெறும் புகைப்படங்களை பிசிசிஐ ட்வீட் செய்துள்ளது. 

அறுவை சிகிச்சை செய்து கொண்ட கேதார் ஜாதவ்

ஐபில் 2018 தொடரில் சென்னை அணியின் முதல் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்க கேதர் ஜாதவ். ஆனால் அந்த போட்டியிலேயே அவருக்கு தொடை எலும்பில் காயம் ஏற்பட்டு தொடரில் இருந்தே விலகினார். இந்நிலையில் அவர் தற்போது அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணியில் மீண்டும் சேர கடுமையாக முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நம்பர் ஒன் இடத்தை இழந்தார் பெடரர்

ஜெர்மனியில் க்ராஸ்கோர்ட் டென்னிஸ் போட்டியான ஹாலே ஓபன் தொடரில் இறுதிப்போட்டியில் 21 வயதான கோரிக், 7-6(6), 3-6, 6-2 என்ற கணக்கில் பெடரரை வென்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதனால் தனது 99-வது சாம்பியன் பட்டத்தை தவறவிட்ட பெடரர், நம்பர் ஒன் இடத்தையும் இழந்தார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close