ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை: ஜக்கி வாசுதேவ்

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2018 02:28 pm
i-didn-t-support-sterlite-says-jaggi-vasudev

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஜக்கி வாசுதேவ் ஆதரவு தெரிவிக்கவில்லை என அவரது சார்பில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிராகவும் அதே நேரத்தில் ஸ்டெர்லைட்டுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ஜக்கி வாசுதேவ் கருத்து தெரிவித்திருந்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் காப்பர் உருக்காலை விஷயத்தில் நிபுணர் அல்ல. ஆனால் இந்தியாவில் காப்பர் தேவை அதிகமாக இருப்பது எனக்கு தெரியும். நாம் நமக்கான காப்பரை நாம் உற்பத்தி செய்யாவிட்டால், அதன் விளைவு சீனாவிடமிருந்து இறக்குமதி செய்ய வேண்டி இருக்கும். பெரிய நிறுவனங்களை, வியாபாரத்தை முடக்குவது இந்திய பொருளாதார தற்கொலையாகும்” என தெரிவித்திருந்தார். இவரின் இந்த கருத்து பொது மக்களிடையே மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தான் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என  ஜக்கி வாசுதேவ் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில், "ஸ்டெர்லைட் ஆலை’ விவகாரம் தொடர்பாக ஜக்கி வாசுதேவ் தெரிவித்த கருத்துகள் சில ஊடகங்களால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு செய்தியாக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள் மத்தியில் ஒரு தவறான பிம்பம் ஒன்று உருவாகி வருகிறது. குறிப்பாக, வன்முறை சம்பவத்தில் 13 பேரின் உயிரிழப்புக்கு வருத்தம் தெரிவிக்காமல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை உருவாக்கியதாக கூறப்படும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஜக்கி வாசுதேவ் குரல் கொடுப்பதாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தப் பார்வை முற்றிலும் தவறானது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற மறுநாள் மே 23-ம் தேதியே கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பதில் அளித்த ஜக்கி வாசுதேவ் 'தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. நம் நாட்டு மக்களை நாமே கொல்லக் கூடாது. இந்தப் பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு கண்டிருக்க வேண்டும். இந்தப் பிரச்சினையை அரசியல் ஆக்கக் கூடாது. சாமானிய மக்களும் இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர். ஆகவே, இந்த சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது' என்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்தார்.

அதற்குப் பிறகும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கருத்து தெரிவித்த ஜக்கி வாசுதேவ், 'தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் ஆழ்ந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியது. நம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், இனி ஒரு சம்பவம் இவ்வாறு நிகழக்கூடாது. அந்த சம்பவத்தில் சாமானிய மக்கள் வன்முறையில் ஈடுபட்டதாக கருதவில்லை. அரசியல் ஆசை கொண்ட சில குழுக்கள் மக்களை பலி கடா ஆக்கியுள்ளதாகவே கருதுகிறேன்.

நான் ஸ்டெர்லைட் ஆலைக்கோ வேறு தொழிற்சாலைக்கோ அரசியல் கட்சிக்கோ ஆதரவளிக்கவில்லை. தேச நலனும் மக்களின் நல்வாழ்வும் தான் எனது முதன்மை நோக்கங்கள்.

சுற்றுச்சூழல் அத்துமீறல்களுக்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுங்கள். பொது உடைமைகளை எரிப்பதோ, தொழிற்சாலைகளை அடைப்பதோ தேசத்திற்கு நன்மை பயக்காது. இதை அரசியலாக்காதீர்கள். நாம் உயிர்களை இழந்துள்ளோம். இத்தகைய சம்பவங்கள் இனி நிகழாதிருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று ஜக்கி வாசுதேவ் கூறினார்.

இந்நிலையில் ‘மக்கள் பாதிக்கப்பட்டது குறித்து வருத்தம் தெரிவிக்காமல், தொழிற்சாலை மூடப்பட்டது குறித்து மட்டுமே ஜக்கி வாசுதேவ் வருந்துகிறார்’ என்ற அர்த்தத்தில் செய்திகளை பிரசுரித்து வருவது வருத்தம் அளிக்கிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close