போக்குவரத்து நெரிசலை குறைக்கவே 8 வழிச்சாலை- திட்ட இயக்குநர்

  ஐஸ்வர்யா   | Last Modified : 12 Jul, 2018 08:38 pm

salem-chennai-expressway-project-director-says-expressway-to-reduce-traffic

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவே சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக சாலை திட்ட இயக்குநர் மோகன் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சேலம்-சென்னை 8 வழிச்சாலையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் அரசு சார்பில் 8 வழிச்சலை திட்ட இயக்குநர் மோகன் உயர்நீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்தார். அதில், “சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் மற்றும் பொறியியல் துறை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

வனப்பகுதி வழியாக சாலை அமைப்பது தொடர்பாக தலைமை வனப்பாதுகாவலரிடம் அனுமதி பெறபட்டுள்ளது. தருமபுரி மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் தேசிய நெடுஞ்சாலை சட்ட விதிகளின் படி நிலம் கையகப்படுத்தபட்டு வருகின்றது. சேலம்-சென்னை 8 வழிச்சாலையால் ஆண்டுக்கு 700 கோடி ரூபாய்க்கு எரிபொருள் செலவு மிச்சப்படுத்தப்படும். மேலும் சென்னையிலிருந்து  திண்டிவனம் வழியாகவும், வேலூர் வழியாகவும் செல்லும் சாலைகளின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அவசர காலங்களில் திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்ட மக்கள் எளிதில் சென்னை, சேலத்தை அணுக முடியும். சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் நில அளவை பணிகளை முடிக்காமல் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி ஆய்வு மேற்கொள்ள முடியாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் தடையில்லா சான்று பெறுவதற்காக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதிலுள்ள நிபுணர்கள் குழு சில நிபந்தனைகளை  பரிந்துரைத்துள்ளது.

நிபந்தனைகள்:

1) சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு வழித்தடத்தை மாற்றுவதற்கு மறு ஆய்வு செய்ய வேண்டும்.

2) கல்வராயன் மலை வனப் பகுதியை தவிர்க்க செங்கிராம் முதல் சேலம் வரை சாலை மாற்றியமைக்கலாம். 

3) வனம் மற்றும் சரணாலயங்களில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிற்குள் சாலை அமைக்கவில்லை என்பதற்கான தடையில்லா சான்றிதழை தலைமை வன பாதுகாவலரிடம் பெற வேண்டும்.

4) 277 கி.மீட்டர் சென்னை - சேலம் சாலை பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பை விரிவாக ஆய்வு செய்ய ஜார்கண்ட் மாநில தான்பத் ஐஐடி உதவி பேராசிரியரை கேட்டுக் கொண்டுள்ளோம். அவரும் இதனை ஏற்றுக் கொண்டார். 

தற்போதைய நிலையில் இந்த நிபந்தனைகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடதக்கது. 


 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close