நக்கீரன் கோபாலின் கைது முதல் விடுதலை வரை...

  ஐஸ்வர்யா   | Last Modified : 09 Oct, 2018 07:02 pm
senior-tamil-journalist-nakkeeran-gopal-arrested-time-line

நக்கீரன் இதழின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாருமான நக்கீரன் கோபால் இன்று காலை 7 மணியளவில் புனே செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றிருந்தபோது அவரை சென்னை நகர போலீசார் கைது செய்தனர். ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த தகவலே கைதுக்கு காரணம் என முதலில் செய்திகள் வெளியானது. 

நக்கீரன் இதழின் அட்டைப்படத்தில் மாணவிகளை பேராசியர்களுடன் செல்லும்படி கட்டாயப்படுத்தியதான குற்றச்சாட்டுக்கு  ஆளான நிர்மலாதேவி தொடர்பாக கட்டுரை வெளியாகியது. அக்கட்டுரை வெளியாகிய நக்கீரன் இதழின் அட்டைப்படத்தில் அந்த பெண் பேராசிரியரையும் ஆளுநரையும் அருகருகே இருக்குமாறு செய்து வெளியாகிய படங்கள் தொடர்பாக குற்றம்சாட்டி சென்னை ஜாம்பஸார் காவல் நிலையத்தில ஆளுநரின் தனிச்செயலர் செங்கோட்டையன் அளித்த புகாரின் அடிப்படையிலே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக  உறுதிப்படுத்தப்படாதத் தகவல்கள் வெளியாகின 

 அந்தப் புகாரின் பேரில் நக்கீரன் கோபால் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124-ஏ பிரிவின் கீழ் தேசதுரோக வழக்கை ஜாம்பஸார் போலீசார் பதிவு செய்தனர்

அரசியலமைப்பின் தலைமைப் பணியில் பதவி வகித்து வருபவர்களை பாதுகாத்திடும் நோக்கில், அவர்களுக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது தேசத்துரோக வழக்குத் தொடுக்க அனுமதிக்கும் சட்டப்பிரிவான 124 ஏ-வின் கீழ் கோபால் மீது வழக்கு தொடுக்கப்படுவதாக போலீசார் நீதிமன்றத்தில் பின்னர் தெரிவித்தனர்.

கைதுக்கு அடுத்த கட்டமாக நக்கீரன் கோபாலை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் கைது செய்யப்பட்ட அவரை, அரசியல் கட்சித் தலைவர்கள் வைகோ, ஸ்டாலின், திருமாவளவன், முத்தரசன் போன்றோர் நேரில் சென்று பார்த்தனர். வழக்கறிஞர் என்ற முறையில் வைகோ கோபாலை சந்திக்க அனுமதி கேட்டபோது காவல்துறையினர் அனுதிக்க மறுத்தனர். இதனால் அந்த இடத்திலேயே அமர்ந்து வைகோ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக வைகோ கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து நக்கீரன் கோபால் தரப்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே கைது செய்யப்பட்ட ‘நக்கீரன்’ கோபாலிடம் மேற்கொண்ட விசாரணைக்கு பிறகு, திருவல்லிகேணியிலுள்ள கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக, அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து அவர் மாலை 4 மணியளவில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மனு மீதான விசாரணையில் பத்திரிகையாளர்கள் சார்பாக நக்கீரன் கோபால் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு குறித்து நீதிமன்றத்தில் வாதிட பிரிதிநித்துவம் வேண்டும் என இந்து பத்திரிகை நிர்வாகிகளில் ஒருவரான என். ராம் நீதிபதி கோபிநாத்தை கேட்டுக்கொண்டார். வழக்கத்திற்கு மாறான, விதிமுறைகளில் இடமில்லாத இத்தகைய வேண்டுகோளை ஏற்ற நீதிபதியும் என்.ராமை கோபாலின் கைது குறித்து வாதத்தை முன்வைக்க நீதிபதி கோபிநாத் அனுமதித்தார்.

இதையடுத்து தன் வாதங்களை எடுத்துரைத்த என். ராம் 'கடந்த ஏப்ரல் மாதம் வெளியான செய்திக்கு இப்போது நடவடிக்கை ஏன்? சட்டப்பிரிவு 124ன் கீழ் ஆளுநரையோ, குடியரசுத்தலைவரையோ, அவர்களது பணிகளை மேற்கொள்வதைத் தடுத்தால் மட்டுமே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நக்கீரன் கோபால் அம்மாதிரியான நடவடிக்கைகளில் எதுவும் ஈடுபடவில்லை. அவரை நீதிமன்றக்காவலில் வைத்தால், அது தவறானதுக்கு முன் உதாரணமாகிவிடும் என மூத்த பத்திரிக்கையாளர் இந்து என். ராம் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்.

இறுதியில் விசாரணைக்கு பிறகு, நக்கீரன் கோபால் மீதான 124 பிரிவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவரை நீதிமன்றக்காவலில் அனுப்ப இயலாது எனக்கூறிய நீதிபதி அவரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்றத்தை விட்டு வெளியில் வந்த நக்கீரன் கோபால், என் சார்பாக வாதாடிய வக்கீல்களுக்கும், மூத்த பத்திரிகையாளர் என்.ராமுக்கும், பக்கபலமாக நின்ற ஏனைய பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நக்கீரன் கோபால், ‘நீதிமன்றத்தின் மீதான கருத்துச் சுதந்திரம் என் பக்கம் இருந்ததனால் நான் விடுதலை செய்யப்பட்டுள்ளேன்.  இன்று காலை விமான நிலையத்தில் வைத்து என்னை கைது செய்தனர். எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த பின்னர் தான், என்னை ஏன் கைது செய்தார்கள் எனவே தெரிய வந்தது.

இன்று எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி, பத்திரிக்கை சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாகவே இதை நான் கருதுகிறேன். நீதிமன்றத்தை நினைத்து பெருமையாக உள்ளது" எனக் கூறினார். 

இறுதியாக நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது ஊடகங்களை மிரட்டும் செயலா என்ற புதிய கேள்வியை எழுப்பியுள்ளது. இருப்பினும் இனிவரும் நக்கீரன் பிரசுரங்கள் விற்பனையில் கல்லா கட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close