துரத்தி அடிக்கப்பட்ட ஸ்டெர்லைட்... அழைத்து வந்த அ.தி.மு.க: தூத்துக்குடி போராட்ட வரலாறு

  முத்துமாரி   | Last Modified : 27 Mar, 2018 08:12 am

கடந்த இரண்டு நாட்களாக ஸ்டெர்லைட் போராட்டம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காட்டுத்தீ போல பற்றியுள்ளது. தமிழகத்தின் கவனத்தை தன் வசம் ஈர்த்துள்ள இந்த போராட்டம், சமீபத்தில் துவங்கியது அல்ல... 20 வருடங்களுக்கும் மேலாக நடக்கும் போராட்டம்.. எப்போது இந்த ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது? யார் இதற்கு அனுமதி கொடுத்தார்கள்? தற்போது இந்த போராட்டம் வலுவடைய காரணம் என்ன? இதுபோன்ற கேள்விகளுக்கு விடை கண்டறியலாம் வாங்க...

1984ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் விஷவாயு வெளியாகி அந்த நகரமே நரகமானது அனைவரும் அறிந்ததே. அதன் பிறகு தொழிற்சாலைகள் என்றாலே மக்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்திய காலம் அது.. அந்த சூழ்நிலையில், 'வேதாந்தா ரிசோர்சஸ்' என்ற மாபெரும் தாமிர உருக்காலை நிறுவனம் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் அனில் அகர்வால்.

1972ல் ஆரம்பிக்கப்பட்டு லண்டனை தலைமையிடமாகக் கொண்ட அந்த நிறுவனம் இந்தியாவில் கால்பதிக்கும்பொருட்டு முதலில் குஜராத்தில் தொழிற்சாலையை கொண்டு வர திட்டமிடப்பட்டது. குஜராத் அரசு இதற்கு அனுமதி வழங்கவில்லை.

தொடர்ந்து கோவாவிலும் கதவுகள் அடைக்கப்பட, மகாராஷ்டிரா அரசு அனுமதி கொடுத்தது. 700 கோடி செலவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சாலை சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் முடிவடையும் நேரத்தில், தூங்கிக்கொண்டிருந்த மக்கள் விழித்துக்கொண்டனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்றது. அரசால் சமாளிக்கமுடியவில்லை. ஆலையை அகற்ற உத்தரவிடப்பட்டது.

கேரளா, கர்நாடகா என தொடர்ந்து தமிழகத்திலும் தாமிர உருக்காலை அமைக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கோரிக்கை மனு அளித்த ஒரு வார காலத்திற்குள் 1993ல் ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய அ.தி.மு.க அரசு இதற்கு அனுமதி அளித்தது. தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இதற்கு தடையில்லா சான்றிதழ் அளித்தது. அப்பகுதி மக்களிடையே, 'வேலைவாய்ப்பு பெருகும், சுற்றுசூழல் பாதிக்காதவாறு ஆலை அமைக்கப்படும்' என பேசி சமாளித்து ஆலை அமைக்கப்பட்டது. அப்போது மத்தியில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இருந்தது. இந்த நேரத்தில் (1994ம் ஆண்டு) குஜராத்தில் கூட ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டது.

கவனிக்க வேண்டியவர்களை கவனித்துக்கொண்ட வேதாந்தா குழுமம் மிக எளிதாக தமிழகத்தில் தன்னுடைய கால்பதித்தது. சுற்றுச்சூழல் மாசை கருத்தில் கொண்டு மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கி.மீ தொலைவில்தான் இந்நிறுவனம் அமைக்கப்பட வேண்டும் என தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியது. ஆனால், மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கி.மீ தொலைவிலேயே ஆலை அமைக்கப்பட்டது. இதனால், தொடக்கம் முதலே ஆலைக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அனைத்தையும் சமாளித்துக்கொண்டு 1996ம் ஆண்டு தன்னுடைய உற்பத்தியை தொடங்கியது ஸ்டெர்லைட். அப்போது, தி.மு.க ஆட்சிக்கு வந்த நேரம். நினைத்திருந்தால் இதைத் தடுத்திருக்க முடியும் என்கின்றனர் இப்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்.

கடந்த 2013ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி, அப்பகுதி மக்கள் காலை எழுந்தபோது, காற்றில் கடுமையாக மாசுபட்டது தெரிய வந்தது. மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தலைவலி, வாந்தி, மயக்கம் என பலர் அவதிப்பட்டார்கள். இந்த பாதிப்புகளுக்கு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கசிந்த சல்பர் டை ஆக்ஸைடு தான் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

அப்போது தமிழகத்தில் ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. நேஷனல் ட்ரஸ்ட் ஆஃப் க்ளீன் என்விரான்மென்ட், வைகோ, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட தரப்பிலிருந்து வழக்குகள் பதியப்பட்டன.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே ஆலை இயங்கி வந்தது. இது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், 2010 ம் ஆண்டு இந்நிறுவனத்தை மூட உத்தரவிட்டது. ஆனால் தொடர்ந்து உச்சநீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கில், நூறு கோடி அபராதம் அளித்து நிறுவனம் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும் இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்ததால் வழக்கின் விசாரணை தொடர்ந்தது.

2013ம் ஆண்டில் ஒரு மாபெரும் புரட்சி கிளம்பியதை அடுத்து, உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாவதற்கு முன்னரே தமிழக அரசு ஆலையை இழுத்துமூட உத்தரவிட்டது. அப்போதும் முதல்வராக இருந்தது ஜெயலலிதாவின் அ.தி.மு.க அரசு தான். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதும் தூத்துக்குடி மக்களின் ஆனந்தத்திற்கு எல்லையில்லாமல் போனது. தங்களது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதினர். முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அ.தி.மு.க அரசுக்கும் பாராட்டுகள் குவிந்தன.

அதே நேரத்தில் இந்த ஆலையை மூடுவதால் 1,300 பணியாளர்கள் வேலை இழப்பார்கள். இந்த ஆலையை நம்பி செயல்பட்டு வரக்கூடிய துணை தொழில் நிறுவனங்கள் மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். அரசுக்கு கிடைக்கும் வருவாய் குறையும். ஆலையில் இருந்து உருவாக்கப்படும் பொருட்கள் ராணுவம் உள்ளிட்ட முக்கியமான துறைகளுக்கு பயன்படுத்தப்படுவதால் அந்த நிறுவனத்தை உடனடியாக மூடுவது சரியல்ல என நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

ஆகவே, தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். மேலும், சுற்றுசூழல் பாதிக்காதவாறு கழிவுகளை அகற்ற வேண்டும் என பல்வேறு விதிமுறைகளை பின்பற்றும்படி ஸ்டெர்லைட்டுக்கு உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பை ஆலை நிர்வாகம் கடைபிடித்ததாக தெரியவில்லை. வழக்கம்போல, தன்னுடைய வேலையைத் தொடர்ந்தது ஸ்டெர்லைட்.

ஸ்டெர்லைட் ஆலையில் ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டால் இரண்டு கிலோ சல்பர் டை ஆக்ஸைடு வெளியேற்றப்படுகிறது. தூத்துக்குடியில் உள்ள ஆலை ஓர் ஆண்டுக்கு 4 லட்சம் மெட்ரிக் டன் தாமிரத்தை உற்பத்தி செய்கிறது. 2017 ஆம் நிதியாண்டில் அதன் வர்த்தகம் 11.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மேலும் விரிவுபடுத்த அந்நிறுவனம் திட்டம் தீட்டியது. ஏற்கனவே விளைவுகளை தாங்கிக்கொள்ள முடியாத மக்கள் இதை எதிர்த்து போராட ஆரம்பித்தனர். தொடர்ந்து 43 நாட்களாக மக்கள் போராடி வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மாவட்டம் முழுவதும் போராட்டம் தொற்றிக்கொண்டது.

தமிழகத்தில் மெரினா புரட்சிக்கு அடுத்து ஸ்டெர்லைட் தூத்துக்குடி புரட்சி என ஒரு மாபெரும் புரட்சி உருவாக காரணம் இதுதான். இனியாவது தூத்துக்குடி மக்களை மட்டுமன்றி, தென்தமிழகத்தையே பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு முடிவுகட்ட வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பு. இதற்கும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் முத்திரை குத்தி ஒடுக்க முயற்சிக்காமல், அரசு நடுநிலையோடு நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதுதான் நடுநிலையாளர்கள் கோரிக்கை... அரசு செய்யுமா?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close