மீடூ புகார்களை யாரும் கேலி செய்ய வேண்டாம்- கமல்ஹாசன்

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Nov, 2018 06:19 pm
kamalhassan-speaks-about-me-too

மீடூ புகார்களை யாரும் கேலி செய்ய வேண்டாம் என்று பெரும்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இசை அமைப்பாளர் ஜிப்ரான் உருவாக்கி இருக்கும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் ஆல்பமான ‘கெட் யுவர் ப்ரீக்கிங் ஹேண்ட்ஸ் ஆப் மீ’ என்னும் இசை குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆல்பத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “3 வயதில் இருந்து வெவ்வேறு வயது மனிதர்கள் அன்பினால் தான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். இந்த வீடியோவை வெளியிடும் தேவையே இங்கு வந்திருக்க கூடாது என்று நினைக்கிறேன். ஜிப்ரானுக்கு முன்பே பாரதியார் இந்த கொடுமைக்கு எதிராக பாடல் எழுதியிருக்கிறார். பெண்ணுக்கு தலைவர் பொறுப்பை கொடுக்கலாமா என்று உலகம் யோசித்து கொண்டிருந்த வேளையில் இந்தியா ஒரு பெண்ணை தலைவராக்கியது. பெண்களுக்கு தற்காப்பு கற்றுக் கொடுப்பது சரியாக இருக்காது, பயமே இல்லாமல் செய்தாக வேண்டும். அந்த பொறுப்பு ஆண்கள் கைகளில் தான் இருக்கிறது. நான் ஒரு பெண்ணின் தந்தை மட்டுமல்ல, ஒரு தந்தைக்கு பிள்ளை. வன்புணர்வு மட்டுமல்ல, வன்முறையாக கைகுலுக்குவதும் கூட தவறு தான். மீ டூ என்று ஆங்கிலத்தில் சொல்வது நன்றாக உள்ளது. நானும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை உள்ளடக்கிய சொல்தான் அது. தற்போது இது கோரசாக எழுகிறது. இப்போது ஏன் அதனை சொல்கிறார்கள் என்று சிலர் கோபித்துக் கொள்கிறார்கள். எப்போது எழுந்தால் என்ன? நியாயமாக, தைரியமாக எழ வேண்டிய குரல் எழுந்து கொண்டிருக்கிறது, அது எழட்டும். அதனை கேலி செய்யாதீர்கள். 

உடன்கட்டை ஏறுதல் என்பதை 200 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னாலும் தவறுதான், அதை தற்போது சொன்னாலும் தவறுதான். எப்போது கேட்டால் என்ன. நியாயமான குரல் எப்போது வேண்டுமானால் எழலாம், அதை யாரும் கேள்வி கேட்கக்கூடாது. வலதாக அல்லது இடதாக இருக்கணும் அது என்ன மய்யம் என்கிறார்கள், அது தான் வள்ளுவர் கூறும் நடுநிலைமை. ஒரு அற்புதமான நிலையில் எங்கள் மக்கள் நீதி மய்யம் உதித்திருப்பது மகிழ்ச்சி. நாளைய இந்தியாவின் சிற்பி மாணவர்களாகிய நீங்கள், அதனால் தான் உங்களிடம் இந்த அரசியலை சொல்கிறேன். உங்களை நம்பி இருப்பது மக்கள் நீதி மய்யம் மட்டுமல்ல, மக்களும் தான். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தேர்வு இருப்பது போல அரசியல்வாதிகளுக்கு தேர்வு வைக்க வேண்டும். நான் அந்த தேர்வுக்கு தான் தயாராகி வருகிறேன். கேள்விகளை கேளுங்கள், என்னை சோதியுங்கள் நான் பதிலளிக்க தயார். மக்கள் தலைவர் ஆக என்னிடம் நேர்மை என்ற திறமை இருக்கிறது. நம் முன்னோர்களின் தாக்கத்தில் இருந்தும், என் மக்களுக்கு நீதி வேண்டும் என்ற கோபத்தில் தான் மக்கள் நீதி மய்யம் உருவானது. மக்களுக்காக தான் வந்திருக்கிறேன், எனக்காகவும் வந்திருக்கிறேன். இங்கு கொடுக்கும் ஆதரவை வாக்குச் சாவடிக்கு வந்தும் தர வேண்டும். உங்கள் கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும்” என்று கூறினார். 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close