தமிழ்நாட்டை ஆளும் ‘கிரிமினல் கேபினட்’: ஸ்டாலின் சாடல்

  ஐஸ்வர்யா   | Last Modified : 09 Nov, 2018 05:03 pm

mk-stalin-press-meet

உயர் நீதிமன்றத்தால், உச்ச நீதிமன்றத்தால், சிபிஐயால், வருமான வரித்துறையால் நெருக்கடிக்குள்ளாகியுள்ள ஒரு 'கிரிமினல் கேபினட்' இன்றைக்கு ஆட்சி செய்து கொண்டிருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

பெரம்பலூர் பொதுக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ''இந்தியா முழுவதும் மோடியின் பாசிச ஆட்சி தலைவிரித்தாடுகிறது என்று சொன்னால் தமிழகத்தில் ஊழல் நிறைந்த இந்த ஆட்சி தலைவிரித்து ஆடுகிறது. திருடும் நேரத்தில்கூட திருடன் கொஞ்சம் அச்சத்துடன் திருடுவான். ஆனால் எந்தவித அச்சமும் இல்லாமல் திருடுகிற பாணி எடப்பாடி பாணி. அந்த ஊழலைக் கண்டுபிடித்து சொன்னால் எடப்பாடியிடம் பதற்றமே இல்லை, பயமே இல்லை. ரூ.3000 கோடி அளவில் டெண்டரில் முறைகேடு நடந்திருக்கிறது, அவருடைய உறவினர்களுக்கே டெண்டர் தரப்பட்டுள்ளது. உறவினர்களுக்கு தரக்கூடாது என்று ஆதாரத்துடன் எடுத்துச் சொன்னால் தமிழ்நாடு முழுவதும் எனக்கு உறவினர்கள் இருக்கிறார்கள் என்கிறார் எடப்பாடி.

உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லப்பட்டுள்ளதே, நீதிமன்றம் வரை சென்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதே? என்று டெல்லியில் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் என்ன சொல்லியிருக்க வேண்டும். ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டால் அதை ஏற்று நான் ராஜினாமா செய்யத் தயார் என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவர் என்ன சொல்கிறார்? புகார்கள் வரும், அப்படிப் பார்த்தால் இந்தியாவில் யாரும் பதவியில் இருக்க முடியாது என்கிறார்.  இந்த சூழ்நிலையில்தான் அனைத்து ஆதாரங்களையும் திரட்டி புள்ளி விவரங்களோடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளிக்கிறோம். வழக்கம்போல் அது கண்டும் காணாமல் இருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் போகிறோம், சிபிஐக்கு விசாரிக்க முகாந்திரம் இருக்கிறது என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. அப்படியானால் எடப்பாடி பழனிசாமி என்ன செய்திருக்க வேண்டும்? பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கை சந்தித்திருக்க வேண்டும். ஆனால் மேல்முறையீட்டுக்குச் சென்றுவிட்டு மடியில் கனமில்லை என்கிறார்.

நான் கேட்கிறேன், செய்யதுரை வீட்டில் எடுக்கப்பட்ட பணம் கனமானது இல்லையா? சேகர் ரெட்டி வீட்டில் எடுக்கப்பட்ட தங்கக்கட்டிகள் கனமானது இல்லையா? அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் எடுக்கப்பட்ட ரூ.89 கோடி சம்பந்தப்பட்ட ஆவணங்கள் கனமானது இல்லையா? டெண்டர் விதிகளைத் தளர்த்தி கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கிறீர்களே அது கனமாக இல்லையா? மடியில் கனமிருப்பதால்தானே அப்பீலுக்குப் போயிருக்கிறீர்கள்.

இன்றைக்கு மாநில முதல்வர் மீது சிபிஐ விசாரணை போடப்பட்டுள்ளது. இதைவிட வெட்கக்கேடு தமிழ்நாட்டுக்கு வேறு எதுவுமில்லை. துணை முதல்வர் ஓபிஎஸ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு, விஜயபாஸ்கர் வருமானவரித்துறையிடம் சிக்கியிருக்கிறார், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி மீது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

உயர் நீதிமன்றத்தால், உச்ச நீதிமன்றத்தால், சிபிஐயால், வருமான வரித்துறையால் நெருக்கடிக்குள்ளாகியுள்ள ஒரு ’கிரிமினல் கேபினட்’ இன்றைக்கு ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இவர்கள் ஒருநாள்கூட பொறுப்பில் இருக்கத் தகுதியானவர்கள் இல்லை.

கொசு டெங்குவை உற்பத்தி செய்வது போல் கோட்டையில் இவர்கள் ஊழலை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள். ஊழல் கொசுக்களை ஒழிக்கும் மருந்து உங்களிடம்தான் உள்ளது. மத்திய அரசுக்கு அடங்கி ஒடுங்கி அடிமையாக இருக்கக்கூடிய இந்த ஆட்சியைத் தொடர நீட் தேர்வா கவலையில்லை, இந்தித் திணிப்பா கவலையில்லை, மதச்சார்பு நடவடிக்கையா என்றைக்கும் கவலைப்படமாட்டோம் என்று மூலையில் அடிமையாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசு இவர்களை கொள்ளையடிக்க விட்டுவிட்டு இஷ்டத்துக்கு மாநிலத்தை ஆள்கிறார்கள். அதற்காகத்தான் இந்த ஆட்சிகளை அகற்ற நாம் உறுதி எடுக்க வேண்டும்.  மதவாதத்துக்கு எதிராக, அடக்குமுறைக்கு எதிராக, ஆணவ நடவடிக்கைக்கு எதிராக, ஊழல், லஞ்சத்துக்கு எதிராக, விலைவாசிக்கு எதிராக ஒரு போர், இந்தித் திணிப்புக்கு எதிராகப் போர் எனத் தனித்தனியாக போர் நடத்துவதைவிட ஒரே ஒரு போர் நடத்திட வேண்டும்.

அது பாசிச பாஜகவுக்கு எதிராக, ஊழல் நிறைந்த அதிமுக அரசுக்கு எதிரான போர். அந்தப் போர் டெல்லி செங்கோட்டை ஆட்சியை அகற்றுவதற்கான போர்,  சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அகற்றுவதற்கான போர் என இரண்டையும் இணைத்துப் போரிடுவோம். அந்தப் போருக்கு இந்த பெரம்பலூர் தொடக்கமாக இருக்கட்டும்'' என்று கூறினார். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.