பெட்ரோல் விலை உயர்வு மத்திய அரசின் சுரண்டல்: ராமதாஸ் கண்டனம்

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2018 01:38 pm
petrol-diesel-prices-rise-ramadoss-condemned

தனியார் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காகவே, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் உள்ளதா என்ற ஐயம் எழுவதாக  பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், உலக சந்தையில் கடந்த சில மாதங்களாக ஏறுமுகத்தில் இருந்த கச்சா எண்ணெய் கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு ஒரு பீப்பாய் 60.13 டாலர் (22.87% )என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் தான் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி அக்டோபர் மாதம் 3ஆம் தேதி இருந்ததை விட பெட்ரோல், டீசல் விலையும் 22.87% குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,சென்னையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலைகள் முறையே 7.20%, 3.66% என்ற அளவில் தான் குறைந்துள்ளன. இது ஏற்றுக்கொள்ள முடியாத விலை நிர்ணயமாகும்.

உலக சந்தையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 60 டாலராக இருந்தது. அப்போது, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.65 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.60.79 ஆகவும் இருந்தது. அப்படியானால், இப்போதும் அதேவிலையில் தான் பெட்ரோலும், டீசலும் விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், பெட்ரோல் லிட்டருக்கு 13.04 ரூபாயும், டீசல் விலை 15.93 ரூபாயும் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. இது மிகப்பெரிய கொள்ளையல்லவா? 

இந்த அதிகப்படியான தொகை வரியாக மத்திய, மாநில அரசுகளுக்கு செல்ல வேண்டும். ஆனால், அரசுகளுக்கு செல்லவில்லை. மாறாக, இவை எண்ணெய் நிறுவனங்களின் கருவூலத்தில் எந்தக் கணக்கிலும் இல்லாமல் சேருகின்றன. இந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில்  இந்தியன் ஆயில் நிறுவனமும் அக்டோபர் 29-ஆம் தேதிக்குப் பிறகு எந்தவித புள்ளி விவரங்களையும்  வெளியிடவில்லை. அந்த விவரங்களை வெளியிட்டால் உண்மை நிலை அம்பலமாகிவிடும் என்பதால் தான் அவற்றை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிடாமல் ரகசியமாக வைத்து பாதுகாத்து வருகின்றன. 

இதேபோலவே ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கும் கூடுதலாக லாபம் கிடைக்கிறது. இந்த தனியார் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காகத் தான் பெட்ரோல், டீசல் விலையை  குறைக்காமல் எண்ணெய் நிறுவனங்களின் கணக்கில் அரசு சேர்த்து வருகிறதோ? என்ற ஐயம் எழுகிறது.

2014-16 காலத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்த போது அதன் பயன்களை மக்களுக்கு வழங்காமல் கலால் வரி உயர்வு என்ற பெயரில் மத்திய அரசு பறித்துக் கொண்டது. இப்போது கச்சா எண்ணெய் விலைக் குறைப்பின் பயன்களை மக்களுக்கு வழங்காமல் எண்ணெய் நிறுவனங்களுக்கு தாரை வார்த்திருக்கிறது மத்திய அரசு. இதை விட பெரிய சுரண்டல் இருக்க முடியாது.

மக்கள் நலனில் அக்கறை இருந்தால் கச்சா எண்ணெய் விலைக்கு இணையாக, பெட்ரோல், டீசல் விலைகளும் குறைக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close