கஜா புயல் கடலூர் -பாம்பன் இடையே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்

  Newstm Desk   | Last Modified : 13 Nov, 2018 05:02 pm

gaja-cyclone-update-cmc

கஜா புயல் மணிக்கு 12  கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் வரும் 15ம் தேதி முற்பகலில் கடலூர் -பாம்பன் இடையே கரையை கடக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்ட கஜா புயல் இன்று காலை 11.30 நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு - தென் கிழக்கே சுமார் 690 கி.மீ தொலைவிலும், நாகைக்கு கிழக்கு- தென் கிழக்கே சுமார் 790 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தற்போது அதி தீவிர புயலாக நிலவி வரும் கஜா புயல் மணிக்கு 12  கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் சின்னம் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு- வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வரும் 15ம் தேதி முற்பகலில் கடலூர் -பாம்பன் இடையே கரையை கடக்கக்கூடும்

கஜா புயலினால் வரும் நவம்பர் 14ம் தேதி இரவு முதல் 15ம் தேதி வரையில் தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், நாகப்பட்டினம், கடலூர், புதுவை, விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் மணிக்கு 80 - 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும். அதிகபட்சமாக சில சமயங்களில் 100 கி.மீ வரை காற்று வீசக்கூடும். இந்த பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் வரும் 15ம்தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. கடல் அலையின் உயரம் ஒரு மீட்டர் வரையில் உயரக்கூடும்.

கஜா புயல் கடந்த 24 மணி நேரம் நிலையாகத் தான் இருந்தது. தற்போது நகரும் வேகம் அதிகரித்துள்ளது. எனவே கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கனமழையை பொறுத்தவரையில் தஞ்சை, திருவாரூர், காரைக்கால், நாகப்பட்டினம், கடலூர், புதுவை, விழுப்புரம் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் கன மற்றும் மிகக் கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிகவும் பலத்த மழை பெய்யக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை பெரும் பாதிப்பு எதுவும் இல்லை. நவம்பர் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும்" என தெரிவித்துளளார். . 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.