‘காகிதப்புலி’ போலாக்கி காலில் போட்டு மிதிப்பதா? - லோக் ஆயுக்தா குறித்து ஸ்டாலின் ட்வீட்

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 03:34 pm

stalin-tweet-about-lok-ayukta

தன்னையும்  தன் ஊழல் சகாக்களையும் காப்பாற்றிக்கொள்ள ‘லோக் ஆயுக்தா’ அமைப்பை ‘காகிதப்புலி’ போல் ஆக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலில் போட்டு மிதிப்பதா? என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். 

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 128 நாட்கள் ஆன பிறகு,”பவர்” இல்லாத லோக் ஆயுக்தா சட்டத்திற்கு அ.தி.மு.க அரசு இப்போது “பல்” இல்லாத விதிகளை உருவாக்கியிருப்பது ஊழல் ஒழிப்பின் அடிப்படை நோக்கத்தையே உருக்குலைத்து கேலிக்கூத்தாக்கியிருக்கிறது. “கமிஷன்” “கரெப்ஷன்” “கலெக்சன்” என்று மெகா ஊழலில் மூழ்கி, கஜானாவைச் சுரண்டி கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க அரசு, நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும், 54 மாதங்கள் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்காமல் தூங்கியது. பிறகு உச்சநீதிமன்றம் அரசின் தலையில் ஓங்கிக் “குட்டு” வைத்து, கெடு விதித்த பிறகு வேறு வழியில்லாமல் ஊழலை ஒழிப்பதற்கு எந்த ஒரு வலுவான அதிகாரமும் இல்லாத லோக் ஆயுக்தா மசோதாவை அவசர அவசரமாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது.

அந்த மசோதாவின் மீதான விவாதத்தில் பங்கேற்று, லோக் ஆயுக்தா மசோதா எத்தகையை உயிரற்ற வெறும் “எலும்புக்கூடாக” இருக்கிறது என்பதை எல்லாம் விளக்கிப் பேசி மசோதாவை பேரவையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்புமாறு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்தினேன். ஆனால் அதை ஏற்க மனமின்றி அந்த மசோதாவை தடுமாற்றத்தோடு நிறைவேற்ற முயன்ற போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளிநடப்புச் செய்து “பொம்மை” லோக் ஆயுக்தாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

அப்படிப்பட்ட லோக் ஆயுக்தாவிற்கும் கூட உரிய காலத்தில் விதிகளை உருவாக்காமல், தலைவரையும் நியமிக்காமல் அ.தி.மு.க அரசு தாமதம் செய்தது. மீண்டும் உச்சநீதிமன்றம் எச்சரித்த பிறகு இப்போது லோக் ஆயுக்தா விதிகளை உருவாக்கியிருக்கிறது. ஊழல் புகார்கள் மீது ரகசிய விசாரணை நடத்த வேண்டும். புகாருக்குள்ளான ஊழல்வாதி குறித்து பத்திரிகைகளுக்கோ, பொதுமக்களுக்கோ தெரிவிக்கக் கூடாது. விசாரணை நடக்கும் போதோ அல்லது விசாரணை முடிந்த பிறகோ கூட அந்த விவரங்களை தெரிவிக்கக் கூடாது என்றெல்லாம் வகுத்துள்ள விதிகள் அ.தி.மு.கவில் உள்ள ஊழல் அமைச்சர்களையும், ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள முதலமைச்சர் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளவும் வகுக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

லோக் ஆயுக்தா விற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் “தேடுதல் குழு” (Search Committee) உறுப்பினர்களை எந்த நேரத்திலும் மாற்றலாம் என்று கொண்டு வரப்பட்டுள்ள விதி, அரசுக்கு விரும்பாத யாரையும் “தேடுதல் குழு” லோக் அயுக்தா அமைப்பிற்கு தலைவராகவோ, உறுப்பினராகவோ பரிந்துரை செய்து விடக்கூடாது என்ற இழிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெரிகிறது. 

ஆகவே, லோக் அயுக்தா அமைப்பிற்கு நேர்மையான ஒரு தலைவரை நியமிக்கவும், ஊழல்வாதிகள் மீது நடைபெறும் விசாரணைகள் ஒளிவுமறைவு இல்லாமல் வெளிப்படையாக பொதுமக்களுக்குத் தெரியும்படி நடக்கவும் “ரகசிய விசாரணை” என்ற விதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன், லோக் அயுக்தா அமைப்பை ஒரு “காகிதப்புலி” போல் ஆக்கி காலில் போட்டு மிதிக்க நினைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.