கதவுகள் இல்லாத குளியலறை; ஹாலில் சிசிடிவி கேமரா: 50 சிறுமியரை மீட்ட திருவண்ணாமலை கலெக்டர்!

  முத்துமாரி   | Last Modified : 01 Dec, 2018 04:11 pm

ias-officer-kandasamy-rescues-50-girls-who-were-being-sexually-abused-in-shelter-home-at-thiruvannamalai

திருவண்ணாமலை கலெக்டரின் அதிரடி நடவடிக்கையால் அம்மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான 50 சிறுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மக்கள் நலன் கருதி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சமீபத்தில் கூட பெற்றோரை தவிக்க விட்டு சென்ற மகன்களிடம் இருந்து சொத்துக்களை பெற்று அவற்றை மீண்டும் பெற்றோரிடமே ஒப்படைத்தார். இந்த செய்தியறிந்து தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர். 

இதைத்தொடர்ந்து தற்போது மற்றொரு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி. 

பீகாரில் உள்ள காப்பகங்களில் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்த சமீபத்தில் செய்தி வெளியானது. இது மக்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே. இதேபோன்ற ஒரு நிகழ்வு தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. 

திருவண்ணாமலையில் மெர்சி என்ற தனியார் குழந்தைகள் காப்பகத்தில் 6 வயது முதல் 18 வயது வரையிலான 48 சிறுமியர்கள் தங்கியிருந்தனர். இந்த காப்பகத்தை லூபன்குமார் என்பவர் நடத்தி வருகிறார். 

கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அங்கு ஆய்வு செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கு சிறுமிகளுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாதது தெரிய வந்தது. மேலும், அங்கு இருக்கும் சூழ்நிலை குறித்து சந்தேகப்பட்ட அவர், சிறுமிகளிடம் பேசியுள்ளார். இதில் அதிர்ச்சிகரமான சில செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆங்கில செய்தித்தாள் ஒன்றிற்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி இந்த தகவல்களை கூறியுள்ளார்.

காப்பகத்தில் சிறுமிகள் கதவுகள் இல்லாத குளியலறைகளை தான் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் உடை மாற்ற கூட தனி அறை இல்லை.  வேண்டுமென்றே குளியலறையின் கதவுகளை லூபன்குமார் கழற்றி எடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் குளியலறைகளை ஒட்டியே லூபன் குமார் தங்கியிருக்கும் அறை அமைந்துள்ளது. அவரது அறையில் உள்ள ஜன்னல் வழியாக அவர் குழந்தைகள் குளிக்கும் போது ஜன்னல் வழியாக பார்ப்பதுண்டு. மேலும், குழந்தைகள், தாங்கள் தங்கியிருக்கும் ஹாலில் வைத்து தான் உடை மாற்றுகின்றனர். அங்கு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 

இதுதவிர குழந்தைகளை லூபன் குமார் தனது அறைக்கு அழைத்து, கை,கால் பிடித்து விட சொல்வது, அவர்களை சீண்டுவது என தொந்தரவு செய்துள்ளார்" என தெரிவித்தார். 

பின்னர் இந்த விவகாரத்தில் உடனடியாக காவல்துறையை அணுகி, சம்மந்தப்பட்ட லூபன் குமார் மற்றும் அவரது மனைவி, மெர்ஸியின் சகோதரர் மணவாளன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மூவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் அந்த 48 சிறுமியர்களும் அரசு காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து மெர்சி காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. 

இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தும் அதிரடியாக ஆய்வு செய்து சிறுமியரை  மீட்ட மாவட்ட ஆட்சியரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.