ஸ்டெர்லைட் வழக்கு: வேதாந்தா நிறுவனத்திற்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 02:58 pm

sterlite-case-madurai-hc-sent-notice-to-vedanta

பாதுகாப்பற்ற முறையில் ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளை அகற்றிய விவகாரத்தில் விளக்கம் அளிக்குமாறு வேதாந்தா நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியதை எதிர்த்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்தது தமிழக அரசு. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டற்கு எதிராக வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து அது விசாரணையில் இருந்து வருகிறது. 

அந்த மனுவை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், சுற்றுசூழல் மாசு தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற மேகாலயா மாநில உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

கடந்த 26ம் தேதி தருண் அகர்வால் குழுவினர் தங்களது அறிக்கையை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்திருந்தனர். அதில், தமிழக அரசின் உத்தரவு செல்லாது என்றும், ஆலையை மீண்டும் திறக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இது தூத்துக்குடி மாவட்ட மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் நெல்லையைச் சேர்ந்த முத்துராமன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.  அதில், "ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம், 3.52 லட்சம் டன் மதிப்புள்ள கழிவுகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், தூத்துக்குடி உப்பாற்றில் கொட்டியுள்ளனர். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட வேதாந்தா நிறுவனம் மீது, மாசுக்கட்டுப்பாடு மற்றும் தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் தூத்துக்குடி கலெக்டர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், வேதாந்தா நிறுவனம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை வருகிற 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close