தீவிரமடையும் போராட்டம்... அறுவை சிகிச்சைகளை புறக்கணிக்க மருத்துவர்கள் திட்டம்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 05 Dec, 2018 05:32 pm
tn-docters-protest

அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 8ஆம் தேதி முதல் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகளை தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவர்களும் காலவரையின்றி புறக்கணிக்க உள்ளதாக ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை தமிழகம் முழுவதும் அறிவித்து வருகின்றன. இந்நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன்,  “அனைத்து மாநில மருத்துவர்களுக்கு இணையான ஊதிய உயர்வை தமிழக அரசு மருத்துவர்களுக்கும் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தியும், எந்தவித பலனும் ஏற்படாததால் இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். 

மேலும், அரசு தங்களது கோரிக்கைகள் குறித்து இதுவரை எந்தவித பேச்சுவர்த்தையும் நடத்தாத காரணத்தால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 8ஆம் தேதி முதல் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகளை தமிழகம் முழுவதும் அனைத்து அரசு காலவரையின்றி புறக்கணிக்க உள்ளோம். இதனை தொடர்ந்து வரும் 11 ஆம் தேதி அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் 1-2 மணி நேரம் வரை போராட்டத்தில் ஈடுபடுவார்கள். மேலும் வரும் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் சென்னை அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் 48 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபடவுள்ளனர். தங்களது கோரிக்கைகளை அரசு அதன்பின்னும் நிறைவேற்றாத பட்சத்தில் அதன் தொடர்ச்சியாக வரும் 13 ஆம் தேதி அரசின் அலட்சிய போக்கை கண்டித்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

 மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் உள்ளிட்ட பல கஷ்டங்களில் உடனிருந்து மக்களுக்காக  போராடிய மருத்துவர்களின் தார்மீக சேவையை மனதில் வைத்து தமிழக முதலமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் விரைந்து தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close