கார்த்திகை அமாவசையில் கங்கை நீர் பொங்கி எழும் அபூர்வ கிணறு!

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 03:42 pm

ganga-water-fill-in-the-fine-well

கார்த்திகை அமாவாசையையொட்டி, ஸ்ரீதர அய்யாவாள் திருமடத்தில் உள்ள கிணற்றில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடினர். 

கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள திருவிசநல்லூர் கிராமத்தில், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு மகான் ஸ்ரீதர அய்யாவாள் வாழ்ந்த காலத்தில் ஒரு கார்த்திகை அமாவாசை தினத்தில் அவரது தந்தைக்கு திதி கொடுக்க ஏற்பாடு நடைபெற்று வந்தது.

அப்போது, வீட்டின் வாசல் முன்பு ஏழையும் பிற சாதிக்காரருமான ஒருவர் பசியால் துடித்தது காண பொறுக்க முடியாமல் திதிக்காக ஏற்பாடு செய்த உணவில் ஒரு பகுதியை அவருக்கு அளித்து விட்டார் ஸ்ரீதர அய்யாவாள். இதை கண்ட திதிக்காக வந்த சாஸ்திரிகள் திதி கொடுக்கும் முன்பே அதற்காக தயாரித்த உணவை பிறருக்கு அளித்து விட்டதால் தோஷம் ஏற்பட்டுள்ளது. இதனை போக்க வேண்டுமானால் நீ காசியில் போய் நீராடி வந்த பின்னரே திதி கொடுக்க இயலும் என கூறி சென்று விட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அய்யாவாள் காசி சென்று வர பல மாதங்கள் ஆகுமே அதுவரை திதி கொடுக்காமல் இருக்க முடியாதே என மனவருந்தினார். மேலும் சிவ பக்தரான அவர் கங்காஷ்டகம் எனும் ஸ்தோஸ்திரத்தை வாசிக்க அவரது வீட்டு கிணற்றில் கங்கை பிரவாகமாக  பொங்கி திருவிசநல்லூர் கிராமமே  வெள்ளக்காடானது.

ஸ்ரீதர அய்யாவாளின் பெருமையை உணர்ந்த ஊர்மக்கள் கங்கை வெள்ளத்தில் இருந்து தங்களையும், ஊரையும் காப்பாற்றிட அவரை வேண்டிக்கொண்டனர். இதையடுத்து அய்யாவாள் கங்கையை தன் வீட்டு கிணற்றிலேயே தங்கிட மீண்டும் பிராத்தித்தார். இதனால் வெள்ளத்தின் சீற்றம் தணிந்து ஊர் இயல்பு நிலைக்கு திருப்பியது.   

இத்தகைய சிறப்பு பெற்ற ஸ்ரீதர அய்யாவாளின் பெருமையை உலகுக்கு உணர்த்திய தினமான கார்த்திகை அமாவாசை தினத்தில் மட்டும் ஆண்டு தோறும்  இங்குள்ள கிணற்றில் கங்கை நீர் பிரவாகமாக பொங்கி வருவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் கார்த்திகை அமாவாசை தினமான இன்று அதிகாலை முதலே தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி , குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் காவிரியில் புனித நீராடி, பின்னர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்திற்கு நீண்ட வரிசையில் நின்று கிணற்றில் இருந்து வாரி இறைக்கப்பட்ட நீரில் புனித நீராடி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியையொட்டி ஸ்ரீதர அய்யாவாள் சுவாமிகள் விக்ரகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, விசேஷ பூஜைகளும் நடைபெற்று வருகிறது.  நாளை (வெள்ளிக்கிழமை) ஸ்ரீதர அய்யாவாளின் உற்சவர் விக்ரக திருவீதியுலாவும் அதனை தொடர்ந்து ஸ்ரீ ஆஞ்சநேய உற்சவமும் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது. இவ்விழாவினையொட்டி கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பக்தர்கள் எளிதாக திருவிசநல்லூர் சென்று வர தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.