காவிரி ஆணையத்துக்கு முழுநேர நிரந்தர தலைவர் வேண்டும்: தமிழக அரசு மனு

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 12:19 pm

tn-govt-s-petition-about-cauvery-management-board

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவர் வேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. 

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்பட்டது. காவிரி ஒழுங்காற்றுக்குழு பெங்களூருவை தலைமையிடமாகவும், காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியை தலைமையிடமாகவும் கொண்டு செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இரண்டு குழுவிலும் 9 பேர் கொண்ட குழு செயல்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. அதன்படி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மசூத் ஹுசேன் தலைமையில் குழு செயல்பட்டு வருகிறது. இவர் மத்திய நீர் வள ஆணையத்தின் தலைவராகவும் இருக்கிறார். 

இந்நிலையில், சமீபத்தில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கைக்கு மத்திய நீர் வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் இருந்து கடுமையாக எதிர்ப்புகள் எழுந்த நிலையில், மத்திய நீர் வள ஆணையத்தின் அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் மேகதாது பகுதியில் அணை விவகாரம் தொடர்பாக கடந்த டிசம்பர் 3ம் தேதி டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது. 

இதையடுத்து தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவர் வேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு அளித்துள்ள அந்த மனுவில், "காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவர் வேண்டும். மசூத் ஹுசேன் மத்திய நீர் வள ஆணையத்தின் தலைவராகவும் இருப்பதால் தான் அவர் கர்நாடகாவிற்கு அனுமதி கொடுத்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close