விஸ்வாசம் படத்திற்கான தடையை நீக்கக்கோரி முறையீடு!

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 12:46 pm
viswasam-movie-case-hearing-at-madras-hc

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் விஸ்வாசம் படம் வெளியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் நடைபெற உள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்துள்ள 'விஸ்வாசம்' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் திரைப்படம் தயாரிக்க வாங்கிய கடனை தயாரிப்புத் தரப்பு திருப்பித் தராத காரணத்தால் ஃபைனான்சியர் உமாபதி, விஸ்வாசம் படத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

வழக்கின் விசாரணை முடிவில், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் 'விஸ்வாசம்' படத்தை வெளியிட தடை விதித்து நீதிபதிகள் இன்று காலையே உடனடியாக உத்தரவிட்டனர். இதையடுத்து கடனை விரைந்து திருப்பி அளிப்பதாகவும், திரைப்படம் வெளியிடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கிக்கொள்ளுமாறும் அப்போது நீதிபதிகளிடம், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும் பைனான்சியருக்கு கொடுக்க வேண்டிய  ரூ.78 லட்சம் கடன் பாக்கியில் ரூ.35 லட்சத்தை இன்றே வழங்குவதாகவும், மீதித் தொகையை 4 நாட்களில் வழங்க உத்தரவாதம் அளிப்பதாகவும் பட தயாரிப்பு நிறுவனம் உறுதியளித்தது.

மேலும், விஸ்வாசம் படத்திற்கு தடை விதிக்கக்கூடாது என்று தயாரிப்பு நிறுவனம் தரப்பில்  கோரிக்கை விடுத்த போது, அந்தக் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யும் பட்சத்திலேயே, அதை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இயலும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி  வழக்கின் தன்மை கருதி இதன் மீதான விசாரணையை  இன்று பிற்பகலிலேயே எடுத்துக்கொள்ளத் தயாராக உள்ளதாகவும் நீதிபதிகள் அப்போது தெரிவித்தனர்

இதைத்தொடந்து, கோவை விநியோகஸ்தர் சாய்பாபா பெயரில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு பிற்பகல் விசாரணைக்கு வரவிருக்கிறது. கடன் தொகையை கொடுப்பதாக ஒப்புக்கொண்டுள்ளதால் விஸ்வாசம் படத்திற்கு விதித்த தடை நீக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close