இணையம் மூலம் காவல் நன்னடத்தை சரிபார்ப்பு சேவை தொடக்கம்..!

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 06:29 pm
getting-started-police-verification-service

ஆன்லைன் காவல் நன்னடத்தை சரிபார்ப்பு  சேவையை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் ஆணையர் சீமா அகர்வால் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில குற்ற ஆவண காப்பகமும், சென்னை பெருநகர காவல்துறையும் இணைந்து தமிழக காவல் நன்னடத்தை சரிபார்ப்பு சேவை என்னும் இணையவழி சேவையை அறிமுகப்படுத்தினர். இந்த சேவையின் மூலம்  தனிநபர் விபரம், வேலை நிமித்தமான சரிபார்ப்பு, வாடகைதாரரின் விவரம் சரிபார்ப்பு மற்றும் வீட்டு வேலையாட்கள் விபரம் சரிபார்ப்பு ஆகியவற்றை அறிந்து கொள்ள இயலும் எனவும், பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக இந்த சேவைகளுக்காக விண்ணப்பிக்கலாம் எனவும், தனிநபரிடம் இருந்து ஒரு விண்ணப்பத்திற்கு 500 ரூபாயும், தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு விண்ணப்பத்திற்கு 1000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், இணையவழி காவல் நன்னடத்தை சரிபார்ப்பு சேவையானது தமிழகம் முழுவதும் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையின் மூலம் வேலை தேவைப்படுபவர்கள், வெளிநாடு செல்வோர் உள்ளிட்ட பலர் தங்களது தேவையை குறைந்த நேரத்தில் பூர்த்தி செய்துகொள்ள முடியும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் ஆணையர் சீமா அகர்வால், இந்த இணையதள சேவை மூலம் விண்ணப்பித்த நபர்களுக்கு காவல்துறை விசாரணைக்குப் பின் 15 நாட்களுக்குள் சான்றிதழ்கள் வழங்கப்படும். இது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் துவங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் சரியான விபரங்கள் அளிக்காத பட்சத்தில் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், காவல்துறையின் இணையதள சேவையை 1 கோடியே 37 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளதாக தெரிவித்த அவர் 3 லட்சத்து 32 ஆயிரம் பேர் இணையதளம் வாயிலாக புகார் அளித்துள்ளதாகவும், ஒன்றரை லட்சம் பேர் குறுஞ்செய்திகள் மூலம் பல தகவல்களை அளித்துள்ளதாகவும் கூறினார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close