அரசியலில் மோத முடியாதவர்களின் சதி: கொடநாடு ஆவணப்படம் குறித்து முதல்வர்

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 01:44 pm
eps-about-tehalka-documentary-on-kodnad-robbery

அரசியலில் நேரடியாக மோத திராணியில்லாதவர்கள் தான் கொடநாடு கொள்ளை சம்பவம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரை வைத்து ஏற்கெனவே பொதுவெளியில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மீண்டும் வெளியிட்டுள்ளனர் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

கொடநாடு கொள்ளை - கொலை சம்பவம் குறித்து தெஹல்ஹா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த படத்தில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை நேரடியாக பேட்டி எடுத்துள்ளார். அதில், கொள்ளை சம்பவத்தை திட்டமிட்டது பற்றி அவர்கள் பேசுகின்றனர். முக்கியமாக, கொடநாடு எஸ்டேட்டில் இருந்து பணம்,நகைகள் மற்றும் சில முக்கியமான ஆவணங்களை கொண்டு வந்து கொடுக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜிடம் கூறியதாக குற்றவாளி சயன் கூறுகிறார். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் இறந்தது திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என்றும், கொடநாடு சம்பவத்திலும், ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னணியிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் உள்ளனர் என்றும் அதில் சித்தரிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கொடநாட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் என்னை சம்பந்தப்படுத்தி செய்தி வெளியாகி உள்ளது. இதில் துளியும் உண்மை இல்லை. இதனை வெளியிட்டவர்கள் பின்புலம் குறித்து விரைவில் அறிந்து அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நேற்றே இதுகுறித்து சென்னை காவல்துறையிடம் வழக்கு தொடரப்பட்டள்ளது.  போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுப்பர். 

கொடநாடு விவகாரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 22 முறை நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர் . ஆனால் அப்போதெல்லாம்  அவர்கள் இந்த வழக்கு குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால் அந்த வீடியோவில் பொய்களை கூறியுள்ளனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னாள் நடந்த ஒரு சம்பவம் பற்றி இப்போது ஏன் புகார் கூறுகிறார்கள். அவர்கள் மீது ஏற்கனவே பல புகார்கள் உள்ளன. 

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அவர் நிர்வாகிகளிடம் இருந்து வாங்கிய ஆவணங்களை கொடநாட்டில் வைத்திருப்பதாக அந்த வீடியோவில் கூறுகின்றனர். ஆனால் ஜெயலலிதா ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை. அவர் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதத்தில் செய்தி வெளியிடுவது கண்டனத்திற்குறியது. 

திமுகவுக்கு என் மீது புகார் கூறுவதே வேலையாகிவிட்டது. உள்ளாட்சி தேர்தல் நடக்காததற்கு நான் தான் காரணம் என்று ஊர் ஊராக சென்று ஸ்டாலின் கூறிவருகிறார். ஆனால் திமுக தொடர்ந்த வழக்கு தான் தேர்தல் நடக்காததற்கு காரணம். இது போல தொழில் வளர்ச்சி இல்லை என்று கூறிவிட்டு தொழில் மாநட்டுக்கு தடை கோருகிறார்" என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close