மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள்: அண்ணா பல்கலை.க்கு ராமதாஸ் வலியுறுத்தல்!

  Newstm Desk   | Last Modified : 19 Jan, 2019 01:42 pm
anna-university-students-protest-ramadoss-condemned

அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய தேர்வு விதிமுறைகளைப் புகுத்தி மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுவது நியாயமற்றது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அண்ணா பல்கலைக்கழகம் கடந்த கல்வியாண்டில் அறிமுகம் செய்த புதிய தேர்வு விதிகளை மாற்ற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்வி மாணவர்கள் நேற்று முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளனர். பருவத் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் வரையறுக்கப்பட்ட காலத்தை விட குறைந்தது ஓராண்டுக்குப் பிறகே படிப்பை முடிக்க வழி வகுக்கும் புதிய விதிகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

இது பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களின் உயர்கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும். இது தவிர்க்கப்பட வேண்டியதாகும். அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் புதிய தேர்வு விதிகளைப் புகுத்தி மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுவது நியாயமற்றதாகும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்களை திருத்துவதில் ஏராளமான குளறுபடிகளும், ஊழல்களும் நடக்கின்றன. நன்றாகத் தேர்வு எழுதிய மாணவர்களை தோல்வியடையச் செய்வதும், சரியாக தேர்வு எழுதாத மாணவர்களை அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சியடையச் செய்வதும் அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றன. விடைத்தாள்களை திருத்துவதில் நடந்த ஊழல் பற்றி விசாரணையும் நடைபெற்று வருகிறது.

உண்மை நிலையும், எதார்த்தமும்  இவ்வாறு இருக்கும் போது அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய தேர்வி விதி நடைமுறை சாத்தியமற்றதாகும். எனவே, புதிய தேர்வு விதிகளை அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; ஏற்கெனவே நடைமுறையில் இருந்த தேர்வு விதிகளையே பல்கலை. மீண்டும் செயல்படுத்த வேண்டும்'' என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close