மக்கள் நலத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு கொடுக்கும்: நிர்மலா சீதாராமன்

  Newstm Desk   | Last Modified : 20 Jan, 2019 05:51 pm
central-government-will-cooperate-with-people-s-welfare-schemes

மக்கள் நலத் திட்டங்களுக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முழுமையான ஒத்துழைப்பு கொடுக்கும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் மத்திய அரசு சார்பில், சென்னை, திருச்சி, சேலம், ஓசூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் பாதுகாப்புத் தொழில் துறை கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான தொடக்க விழா திருச்சியில் அமைச்சர் சம்பத் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், " தமிழக முன்னாள் முதலமைச்சர்களாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கனவுகளை பிரதமர் மோடி தான் நிறைவேற்றி வருகிறார்.  பிரமர் மோடி தமிழகத்தில் பாதுகாப்புத்துறை உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என கூறியதோடு, மாநில அரசின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தி வருகிறது. 

பொதுத் துறை நிறுவனங்களில் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வதாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அது போன்ற நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பே இல்லை. பாதுகாப்பு துறைக்கான தரமான தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கான சூழல் திருச்சியை சுற்றி உள்ளது. கோவையில் உள்ள தொழில் நிறுவனத்தினருடன் ஒப்பிடுகையில், திருச்சியில் திறமையான தொழில் நிறுவனத்தினர் உள்ளனர். தமிழக அரசு, அவர்களை கண்டுபிடித்து பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும். 

நம் நாட்டில் உள்ள தொழில் நிறுவனத்தினர் பயன் பெற வேண்டும் என்பதற்காக, இன்னும் 10 ஆண்டுகளுக்கு வெளியில் இருந்து வரும் ஆர்டர்களை தவிர்த்து விட்டு, நம் நாட்டு தொழில் நிறுவனங்களிடம் இருந்தே ஆர்டர் பெற திட்டமிட்டுள்ளோம்.

ரபேல் விமான நிறுவனத்துக்கு முழு தொகையும் கொடுப்பதாக கூறுவது தவறு. விமானத்தின் விலையில், 50 சதவீதம் தொகையை, நம் நாட்டு பொருட்களை வாங்குவதற்கோ, முதலீடு செய்வதற்கோ பயன்படுத்த வேண்டும், என்று தான் கோரப்பட்டுள்ளது. இது புரியாமல் தான், சிலர் ஏதேதோ பேசிக்கொண்டுள்ளனர்.

திருச்சி விமான நிலையம் விரிவாக்கம் மற்றும் அரிஸ்டோ ரவுண்டானா பாலம் பணிகளை முடிப்பதற்கு தேவையான நிலத்தை வழங்க வேண்டும் என்று எம்.பி.,குமார், அமைச்சர் நடராஜன் போன்றவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.எதிர்கால தேவைக்காகவே, ராணுவ நிலம் கைவசம் வைக்கப்பட்டுள்ளது. அதை, மாநில அரசின் தேவைக்கு உடனடியாக, வாங்கிப் பயன்படுத்தி விட முடியாது.

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ராணுவ நிலத்துக்கு சமமான மதிப்புள்ள நிலத்தை, மாநில அரசு பரிமாற்றம் செய்து கொடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு செய்தால், விமான நிலையம் விரிவாக்கம் மற்றும் பாலம் பணிக்கு தேவையான ராணுவ நிலத்தை ஒப்படைக்க, இரண்டு நாட்களில் அனுமதி பெற்றுத் தருவேன். மக்கள் நலத் திட்டங்களுக்கு, எப்போதும், மோடி தலைமையிலான மத்திய அரசு முழுமையான ஒத்துழைப்பு கொடுக்கும்"  என தெரிவித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close