இயக்குநர் பாரதிராஜா மீது இளம் நடிகர் நிதி மோசடி குற்றச்சாட்டு!

  Newstm Desk   | Last Modified : 22 Jan, 2019 10:16 am
srilankan-actor-vinoj-charges-against-director-bharathiraja

பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மீது இலங்கையைச் சேர்ந்த இளம் நடிகர் இராஜரட்ணம் வினோஜ் நிதி மோசடி குற்றச்சாட்டு கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையைச்  சேர்ந்த இளம் நடிகரான இராஜரட்ணம் வினோஜ், சென்னையில் உள்ள இயக்குநர்  பாரதிராஜாவின்  திரைப்பட கல்லூரியில், சினிமா ஒளிப்பதிவு குறித்த பட்டயப்படிப்பில் சேர்வதற்காக, கடந்த 2017-இல் தமது வங்கிக் கணக்கிலிருந்து  2.88 லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளார்.

ஆனால், விசா கிடைப்பதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டதால், திட்டமிட்டப்படி அவரால் திரைப்பட கல்லூரியில் சேர முடியாமல் போனது.இதையடுத்து, படிப்புக்காக தான் செலுத்தியத் தொகையை திரும்பித் தரும்படி கேட்டுள்ளார் வினோஜ்.

எதிர்பாராதவிதமாக படிப்பில் சேர முடியாமல் போனால், விண்ணப்பதாரர் செலுத்திய தொகை முழுமையாக திருப்பித் தரப்படும் என, பாரதிராஜாவின் திரைப்பட கல்லூரி நிர்வாகம்  வினோஜிடம் முன்பு தெரிவித்திருந்தது.

 ஆனால் அவர், தான் செலுத்திய பணத்தை திரும்ப கேட்டப்போது, 22 ஆயிரம் ரூபாயை கழித்துவிட்டு மீதி பணம்தான் தரப்படும் எனக் கூறியுள்ளனர்.

அதற்கு வினோஜ் சம்மதித்துள்ளார். ஆனால், 2017 செப்டம்பர் மாதத்திலிருந்து ஒரு முறைக்கு பல முறை தான் செலுத்திய தொகையை திரும்பத் தரும்படி வினோஜ் கேட்டும், கல்லூரி நிர்வாகம் தட்டிக் கழித்து வந்துள்ளது.

ஒரு கட்டத்தில் வினோஜ் கோபப்பட்டதும், பாரதிராஜாவின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.2.14 லட்சம் செலுத்தப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அவருக்கு போட்டோ ஆதரமும் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால்,  தான் செலுத்திய கல்விக் கட்டணம் இதுவரை தமக்கு திரும்ப கிடைக்கப்பெறவில்லை என்று, யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் வினோஜ், இயக்குநர் பாரதிராஜா மீது பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

நடிகர் இராஜரட்ணம் வினோஜ் குருவி, கும்கி, அவன் இவன்,  அயன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close